அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 16 July 2024

arrowமுகப்பு arrow செய்திகள் arrow எட்டுத்திக்கும் arrow கலையரசு கே. சொர்ணலிங்கம் விருது
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கலையரசு கே. சொர்ணலிங்கம் விருது   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: இளையதம்பி  
Friday, 03 August 2007

இலண்டனில்
கலையரசு கே. சொர்ணலிங்கம் விருது வழங்கலும்
புகலிட குறும்பட ஒளித்தட்டு வெளியீடும்.

கலையரசு கே. சொர்ணலிங்கம் விருது வழங்கும் நிகழ்வு

ஈழவர் திரைக்கலை மன்றம் நடாத்திய கலையரசு சொர்ணலிங்கம்  விருது வழங்கலும் புகலிட குறும்பட ஒளித்தட்டு வெளியீடும்  29.07.2007 ஞாயிற்றுக் கிழமை லண்டனில் நடைபெற்றது.
மங்கல விளக்கேற்றல், அகவணக்கத்தை அடுத்து நவாலியூர்  சோமசுந்தரப் புலவரின் தமிழ்த்தாய் வாழ்த்தை செல்வி ஷோபனா  பென் சந்திரன் பாட விழா ஆரம்பமானது.
இவ்விழாவிற்கு தலைமையேற்ற  ஈழக்கூத்தர் ஏ.சீ.தாசீசியஸ்  அவர்களுக்கு ஈழவர் திரைக்கலை மன்றத் தலைவர் பாரிஸ்டர்  எஸ்.ஜே.யோசெப் சந்தன மாலையிட்டு வாழ்த்தினார்.
தாசீசியஸ் அவர்கள் விருதுபெற அழைக்கப்பட்ட கிழக்கிலங்கை  பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைப் பீடாதிபதி பால.சுகுமார்  அவர்களையும்,  35 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்தும் நாடகப்  பணியாற்றிவரும் அவைக்காற்று கழகத்தின் பொறுப்பாளர்கள் திருமதி ஆனந்தராணி பாலேந்திரா- திரு.கே. பாலேந்திரா அவர்களையும்  சபைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த நாட்டுப்புறப் பாடல்  ஆய்வாளரும்,   பாண்டிச்சேரி பல்கலைக் கழக பேராசிரியருமான  கே.ஏ.குணசேகரன் அவர்களையும், தமிழறிஞர் செவாலியர் அமுதுப்  புலவர் அவர்களையும் வரவேற்று மேடையில்அமரச் செய்தார்   விழாத்தலைவர் ஈழக்கூத்தர் ஏ.சீ.தாசீசியஸ் அவர்கள். 
ஈழவர் திரைக்கலை மன்ற யேர்மன் கிளையின் சார்பில் வரவேற்புரை நிகழ்த்திய வில்லிசைக் கலைஞர் நாச்சிமார்கோயிலடி இராஜன்  கலையரசு சொர்ணலிங்கம் அவர்களை நினைவு கூருகையில்   சிறுவயதில் தனது முதலாவது நாடக அரங்கேற்றத்தின்போது அவரை தனக்கு அறிமுகமாக்கிய வண்ணை கலைவாணர் நாடக  மன்றத்தையும் நினைவு கூர்ந்தார்.


முகவுரை வழங்கிய மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் கலையரசு  சொர்ணலிங்கம் அவர்களின் நினைவுகளை மீட்டபோது  கண்கலங்கினார். இளவயதில் தந்தையை இழந்த தனக்கு தந்தையைப் போல பாசத்தைத் தந்தவரென்றும், எந்தக் கலைஞரையும்  புண்படுத்தாமல் தட்டிக் கொடுக்கும் பெருமனம் படைத்தவராகவும்,  நாடகத்தை தன்வாழ்வின் உயிர் மூச்சாக இறுதிவரையில் எண்ணி  வாழ்ந்தவர் கலையரசர் என்றும் குறிப்பிட்ட அவர்; ஒரு நாடகனை  மற்றொரு நாடகன் குறை கூறுவதை தவிர்த்து தான் மற்றவரை விட தரமாக நாடகத்தை தந்தால் மங்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்  என்று கலையரசர் அடிக்கடி தெரிவிக்கும் கருத்தையும் தெரிவித்தார்.


தலைமையுரையாற்றிய ஈழக்கூத்தர் ஏ.சீ.தாசீசியஸ் அவர்கள்  யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி நடைபெற்ற காலத்தில்  கலையரசர் அங்கு நடைபெறும் பயிற்சிகளைப் பார்க்க விருப்பம்  தெரிவித்தபோது, அவருக்கு மரியாதை செலுத்தும் முகமாக அவர்  வீட்டு முற்றத்தில் ஒருநாள் பயிற்சி முழுவதையும் நடாத்தி  காண்பித்ததையும் அப்பயிற்சியில் திருமதி ஆனந்தராணி பாலேந்திரா  அவர்களும் பங்கேற்றதையும் நினைவுபடுத்தினார்.
கிழக்கிலங்கைப் பல்கலைக் கழக துணைவேந்தராக தகுதிபடைத்த   கலைஞர் பால சுகுமார் இனவாத சிங்கள அரசின் அராஜகங்களுக்கு  முகம் கொடுத்து மீண்டு வந்ததையும் - அவரின் ஆளுமைகளையும்  விதந்துரைத்தார். கலைஞர் பாலேந்திரா அவர்கள் புகழ்பெற்ற நாடக  இயக்குநர் சுகேர் கமீட் அவர்களின் ஏணிப்படிகள் மூலம்  அறிமுகப்படுத்தப்பட்டதையும், தம்மோடிணைந்து பிச்சைவேண்டாம்  நாடகத்தில் ஆனந்தராணி-பாலேந்திரா பங்கேற்றதையும், அதனூடாக  ஆனந்தராணி - பாலேந்திரா இணையரிடம் மலர்ந்த காதலையும்  நகைச்சுவையோடு நாசூக்காக வெளிப்படுத்தினார்.
விழாவுக்கு வருகை தந்திருந்த கலையரசரின் மகளையும்  பேரனையும் தலைவர் சபையில் அறிமுகம் செய்தபோது பேரன்  ஆனந்தக் கண்ணீர் வடித்ததைக் காணக் கூடியதாக இருந்தது.  மண்டபத்தில் கலையரசரின் நாடகங்களில் அவர் ஏற்று நடித்த  கதாபாத்திரங்களின் நிழற்படங்கள் (1916 முதல் 1960 வரை)  வைக்கப்பட்டிருந்தது பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
கலைத்துறையில் பெரும் ஈடுபாடு கொள்ளாவிட்டாலும்,  கலைஞர்களை வாழ்த்த, பாராட்ட தயங்குவதில்லையென்று   சபையினரை சிரிக்க வைத்து சிறப்புரையாற்றினார் தமிழறிஞர்  செவாலியர் அமுதுப் புலவர்.

கே.ஏ.குணசேகரன் வாழ்த்துரை 
தொடர்ந்து உரையாற்றிய பாண்டிச்சேரி பல்கலைக் கழக  நாடகத்துறை பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் இவ்விழாவில் பங்கேற்க தனக்கு கிடைத்த வாய்ப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அத்துடன்  பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் தங்கப்பதகம் பெற்று தனது  துறைக்கு பெருமை சேர்த்த தனது மாணவன் பாலசுகுமாருக்கு  வழங்கும் இவ்விருது தனக்கும் பெருமை சேர்ப்பதாக குறிப்பிட்டார்.

கலையரசு கே.சொர்ணலிங்கம் விருது வழங்கும் நிகழ்வில் கி.பி.அரவிந்தன்
சிறப்புரையாற்றிய கவிஞர் கி.பி.அரவிந்தன் முன்னாள் பீடாதிபதி  பால.சுகுமாருடன் தாயகத்திலிருந்த போதே 1974ம் ஆண்டிலிருந்து  தனக்கு தொடர்பிருந்ததாகவும்,  தமிழருக்கான கலை முகத்தின்  வேரைத்தேடிச் செல்லும் ஆன்ம சுத்தமான தேடல்கள் கொண்ட ஒரு  பரம்பரைக் கலைஞர் அவரெனவும், பல்கலைக் கழகத்தில்  விரிவுரையாளராக மட்டுமன்றி, அரங்க வெளிப்பாடுகளையும் தன்னுள் தாங்கிய பன்முகக் கலைஞராகவும் பாலசுகுமார் விளங்கினாரென்றும், கலையரசு சொர்ணலிங்கம் நினைவாக ஈழவர் திரைக்கலை மன்றம்  வழங்கும் கலாவினோதன் விருதுபெற முற்றிலும் பொருத்தமானவர்  பால சுகுமார் என தனது சிறப்புரையில் புகழாரம் சூட்டினார்  கி.பி.அரவிந்தன்.
கலைஞர் கே.பாலேந்திரா தம்பதிகளின் நீண்ட கால நாடக  முயற்சிகளை தாயகத்தில், புகலிட வாழ்வில் என பகுத்து  காலத்துக்குக் காலம் அவரின் நாடக வளர்ச்சி உயர்ந்து  சென்றதையும், சமூகம் அதனால் பயன் பெற்றதையும் குறிப்பிட்டு  நீண்டதோர் உரையாற்றினார் ஒலிபரப்பாளர் சிறீரங்கன்.

பாலசுகுமார் கெளரவிப்பு

பாலேந்திரா தம்பதிகள் கெளரவிப்பு

சபையோர் ஆசனத்திலிருந்து எழுந்து நிற்க ’’ஈழவர் திரைக்கலை  மன்றத் தலைவர் பாரிஸ்டர் யோசெப் அவர்கள்  முன்னிலையில், உயர்தனி நடிகர் ஏ.ரகுநாதன் முன்னிலையில் இங்கு  சூழ்ந்திருக்கும் சபையோர் முன்னிலையில், கலையரசு சொர்ணலிங்கம் நினைவாக ஈழவர் திரைக்கலை மன்றம்  கலாவினோதன் விருது   வழங்கிக் கௌரவிக்கிறது’’  என்று ஈழக்கூத்தர் தாசீசியஸ் அவர்கள்  முழங்க  சபையோர் அனைவரினதும் கரவோசையொலிக்க 2006ம்  ஆண்டிற்கான விருது பாலசுகுமாருக்கும், 2007ம் ஆண்டிற்கான  விருது பாலேந்திரா - ஆனந்தராணி தம்பதியினருக்கும்,  வழங்கப்பட்டன. விருதுபெற்றோர் செவாலியர் அமுதுப் புலவரால்  பொன்னாடை போர்த்தப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். 

கலைரசு சொர்ணலிங்கம் விருது வழங்கும் நிகழ்வில் பார்வையாளர்கள் 
வாழ்த்துரை வழங்கிய திருமறைக்கலாமன்ற கலைஞர் சாம்.பிரதீபன்  கௌரவிக்கப்பட்ட கலைஞர்கள் பற்றி முதலிற் பேசியோர் தொடாத  இடங்களைத் தொட்டுச் சென்றார். ஊடகவியலாளர் என்.செல்வராஜா  வாழ்துவதற்கு நாடகக் கலைஞனாக தான் இல்லாதிருந்தாலும்  வாழ்துவதற்கான மனமிருந்தாற் போதுமென வாழ்த்திச் சென்றார்.  வாழ்துரைக்க வந்த வேறு சிலர் பேசியபோது அவர்களின்  சுயதம்பட்டத்தால் அவையோர் முகம் சுழித்ததைக் காணக்கூடியதாக  இருந்தது.
ஏற்புரை நிகழ்த்திய பாலசுகுமார் தான் ஒரு அரங்கக் கலைஞன்  என்பதை தன் குரல் வளத்தால் அங்க அசைவுகளால் நிறுவி பரதமும் -கர்நாடக இசையும் புகலிடத்தில் விரும்பிப் பயிற்றுவிக்கப்படுகின்ற  நிலையில், எமக்கான இசையும் கூத்தும் இருக்கிறது என்பதை  மறந்துவிடக் கூடாது என்றுகூறி தமிழர்களின் கூத்திசையின் சந்தம்  ஒன்றையும் பாடிக்காண்பித்தார்.
கே.பாலேந்திரா தனது கடந்த கால பதிவுகளை நினைவுபடுத்த -  திருமதி ஆனந்தராணி பாலேந்திரா 35 வருடத்திற்கு முன் நாடகத்தில்  குடும்பப் பெண்கள் நடிக்க முன் வருவதில்லையென்ற உண்மையைக் கூறி, தான் நடிக்க முன்வந்து உறவினர்களின் வசைபாடலைப்  பரிசாகப் பெற்றதையும், மனம் தளராது தன்னை தொடர்தும்  நாடகங்களில் நடிக்க வைத்த தனது பெற்றோருக்கு தனக்குக்  கிடைத்த விருதை சமர்ப்பணமாக்குகிறேன் என்றும் கூறி  சபையினரை நெகிழச் செய்தார். நடனமாட பெண்களை அனுமதிக்கும் பெற்றோர் நடித்தால் கௌரவம் குறையுமென புகலிட வாழ்விலும்  எண்ணுவது விந்தையாக இருக்கிறது என்ற தனது ஆதங்கத்தையும்  தெரிவித்தார்.

ஒளித்தட்டு வெளியீடு 
தொடர்ந்து இடம்பெற்ற குறும்பட ஒளித்தட்டு வெளியீட்டுரையில்  நாச்சிமார்கோயிலடி இராஜன்; புகலிடத்தில் தயாரிக்கப்படும்  படங்களுக்கு சந்தைப்படுத்தும் வசதியில்லையென்ற குறையைக்  குறிப்பிட்டு, இங்கு தயாரிக்கப்படும் படங்களை மக்களிடம் கொண்டு  செல்லும் பாரிய முயற்சியை மேற்கொண்டிருக்கின்ற அப்பால் தமிழ்  இணையத் தளத்தின் ’சலனம்’ அமைப்புககு நன்றி தெரிவித்து  ஒளிவட்டில் இடம்பெற்ற கலைஞர் பராவின் பேரன் பேர்த்தி, கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் வாழ்வெனும் வட்டம், இளம் கலைஞர்  வதனனின் எது மட்டும் ஆகிய படங்களின் சிறு குறிப்புகளைத்  தெரிவித்தார். பேராசிரியர் குணசேகரன் ஒளித்தட்டை வெளியிட  முதற்பிரதியை திரு.சிவனடியான் சிறீபதி  பெற்றுக்கொண்டார்.

விழாவின் நிறைவாக பாரிஸ்டர் யோசப் அவர்கள் நன்றியுரை வழங்கினார். மண்டபம் நிறைந்து, கலைஞர்கள் குழுமியிருந்த சபையில் தாமும் பங்கேற்றிருக்கலாமேயென பங்கேற்காதவர்கள் எண்ணுமளவிற்கு விழா சிறப்புற நடைபெற்றது அனைவர் முகத்திலும் தாண்டவமாடிய மகிழ்ச்சிப் புன்னகையால் உறுதியாயிற்று.

படத்தில் உள்ளோர்: கி.பி.அரவிந்தன், பாலசுகுமார், கே.ஏ.குணசேகரன், பாரிஸ்டர் யோசப், நாச்சிமார் கோவிலடி இராஐன்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 16 Jul 2024 10:19
TamilNet
HASH(0x5623b04025d8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 16 Jul 2024 10:19


புதினம்
Tue, 16 Jul 2024 10:19
     இதுவரை:  25366920 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6980 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com