அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 22 June 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 39 arrow தமிழ் அகராதிகள் பற்றிய கருத்தாடல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தமிழ் அகராதிகள் பற்றிய கருத்தாடல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: த.சிவசுப்பிரமணியம்  
Monday, 03 September 2007

ஒரு மொழியிலுள்ள சொற்கள் அனைத்தையும் அகர எழுத்து வரிசையில் அமையும்படி ஒரு சேரத் தொகுத்து,  அவற்றின் பொருள்களை அம்மொழியாலேனும் பிறமொழியாலேனும் விளக்கும் நூல் அகராதி எனப்படும்.

"இலங்கையில் அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ் மொழி மூலமான கல்விப் போதனை இடம்பெற்று வருகின்றது. பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் வணிகக் கல்வியினை தமிழ்மொழி மூலம் கற்று வருகின்றனர். இந்த வகையில் வணிகக் கல்வியினைப் போதிப்பதற்கும் கற்பதற்கும் வணிகச் சொல் அகராதி ஒன்றின் தேவை மிக முக்கியமானதாகும்" என்று கூறும் என். சிறிரஞ்சனின் குணநிதி, 'வணிகச் சொல்விளக்க அகராதி'யை ஆக்கித் தந்துள்ளார்.

தமிழின் முதல் 'வணிகச் சொல்விளக்க அகராதி' என்று பெருமைப்படும் அளவுக்கு இன்றைய காலகட்டத்தில் இது முதன்மை பெறுகிறது.

இலங்கையில் தாய் மொழிக் கல்வியின் பயன்பாடு வேறு எந்த நாட்டிலும் பார்க்க பல்கலைக்கழகம் வரை வியாபித்திருக்கிறது. விஞ்ஞானம், மருத்துவம், கணக்கியல், வணிகம், கலை போன்ற துறைசார்ந்த கல்வியாவும் எமது நாட்டைப் பொறுத்தளவில் தாய்மொழியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. சில துறை சார்ந்த கல்விக்கு ஆங்கிலம் போன்ற உலக மொழிகளிலிருந்து நூல்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்பொழுது புதிய கலைச் சொற்களின் தேவையும் அவசியமும் தாய்மொழிக்கு இன்றியமையாததாக இருப்பதால் அவற்றைப் புரிந்து கொள்வதற்கு அகராதியின் துணை நாடப்படும்.

இலங்கையில் ஒரு துறை சார்ந்த ஒரு சில அகராதிகள் வெளிவந்தபோதிலும் எல்லாத் துறைக்கும் போதுமானளவு அகராதிகள் இன்னும் வெளிவரவில்லை. அந்தப் பின்புலத்தில்தான் வணிகத் துறைசார்ந்த குணநிதி வணிகச் சொல்விளக்க அகராதியை என்.சிறிரஞ்சன் தனது புலமைசார் நிலையில் நின்று பல பிரயத்தனங்களின் மத்தியிலும் வெளிக்கொணர்ந்து பெருமை சேர்த்துள்ளார்.

'குணநிதி வணிகச் சொல்விளக்க அகராதியின்' வருகையுடன் ஒட்டி இலங்கையில் தமிழ் அகராதிகள் பற்றிய கருத்தாடல் கடந்த ஞாயிறு இடம்பெற்றது. கொழும்புத் தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற கருத்தாடல் நிகழ்வுக்குப் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் தலைமை தாங்கினார். இலங்கையில் அகராதிகளுக்கான தேவை, அவற்றின் பயன்பாடு, அகராதியாக்கம் மற்றும் வெளியீட்டில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் தொடர்பிலான கருத்தாடல் இடம்பெற்றன.

கொழும்பு பல்கலைக்கழக கல்விப்பீட பீடாதிபதி பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தனது ஆரம்ப உரையில்..

"மிகவும் முக்கியமான நிகழ்வில் ஆரம்ப உரையாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தமிழ் மக்களின் கல்வி மேம்பாடுபற்றி இன்று பேச இருக்கின்றார்கள். பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வருகை மிகவும் விஷேடமானது. இன்று இரண்டு நிகழ்வுகள் இங்கு இடம்பெறுகின்றன. ஒன்று அகராதிகள் கண்காட்சி. தமிழில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் அகராதிகளைப் பார்வையிடக்கூடிய வசதியைச் செய்து தந்துள்ளார்கள். தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இவ் அகராதிகள் கண்காட்சி மிகவும் பயனுள்ளது. பலருக்கு அவற்றின் முக்கியத்துவம் அவசியம் என்ற வகையில் இக் கண்காட்சி சிறப்புப் பெறுகின்றது. அடுத்தது என். சிறிரஞ்சனின் அகராதி நூல் வெளியீடு தமிழ் கூறும் சமுதாயத்தின் சார்பில் நன்றிக்கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் பதம் கூறும் கலைச் சொற்கள் வெளிவந்தபோதிலும் அவை அகராதியாக வெளிவரும்போது தனிச்சிறப்புப் பெறுகின்றது. ஏற்கனவே, சில அகராதிகள் (சமூக அறிவியல், இயற்கை அறிவியல்) வெளிவந்திருக்கின்றன. சில துறை சார்ந்த அகராதிகள் வெளிவரவிருக்கின்றன. உலகில் பல நாடுகளில் (40 நாடுகளுக்கு மேல்) தமிழர்கள் வாழ்ந்தாலும் எத்தனை நாடுகளில் தமிழ் கல்வியல் மொழியாக இருக்கின்றது. இலங்கையில் மட்டும் தான் முதலாம் ஆண்டு தொடக்கம் 13 வரை தாய் மொழியிலலேயே கல்வி புகட்டப்படுகின்றது. கணிதம், மருத்துவம், வணிகம், கலை ஆகிய துறைகளில் பல்கலைக்கழகம் வரை தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் மொழியிலேயே கல்விகற்கின்றனர். இந்தப் பின்புலத்தில் மேற்படி துறைசார்ந்த தமிழ்ச் சொற்களின் தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ள ஆங்கில மொழியிலிருந்து புதிய சொற்கள் தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டிய தேவை முன்னெழுந்துள்ளது. தமிழ் மொழிமூலம் கல்விகற்பவர்களுக்கு கூடிய விளக்கங்கள் தேவை என்றதனால்தான் அகராதியின் முக்கியத்துவம் அவசியமாகின்றது. தமிழ் மொழியில் புதிய சொற்கள் தேவைப்படுவதனால்தான் இத்தகைய அகராதிகள் இன்றியமையாததாக இருக்கின்றன" என்று தெரிவித்தார்.

'அகராதியாக்க அனுபவங்கள்' என்னும் தலைப்பில் குணநிதி வணிகச் சொல்விளக்க அகராதியின் தொகுப்பாசிரியர் என்.சிறிரஞ்சன் உரை நிகழ்த்தினார்.

"எனது கல்விக்கும் கற்பித்தலுக்குமாக அகராதியின் தேவை என்னால் உணரப்பட்டது. எங்களுக்குத் தேவையானவற்றை ஆங்கிலத்தில் கற்று தமிழில் வணிகம் தொடர்பான கலைச்சொற்களைத் தேடினேன். இங்கு இருந்த கலைச்சொற்கள் போதுமானவையாக இருக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் தேடுதலில் ஈடுபட்டேன். கலைச்சொற்களின் தேவை எனக்கு ஏற்பட்டது. கலைச் சொல் மட்டுமே போதாது. இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் ஒரு தமிழ் வடிவத்தை விளங்கப்படுத்த எனக்குப் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. இச் சந்தர்ப்பத்தில்தான் அகராதி ஒன்றைக் கொண்டுவரவேண்டும் என எண்ணினேன். தேவை ஏற்பட்டபடியால்தான் இந்த அகராதியை தமிழ், ஆங்கில அகராதியாகவும் தமிழ் அகராதியாகவும் பயன்படுத்தக்கூடியதாகத்தான் தயாரித்தேன். இலங்கையில் துறைசார்ந்த அகராதிகள் வெளிக்கொணரப்படவேண்டும். தமிழ் நாட்டை நம்பியிருக்க முடியாது. துறைசார்ந்த அகராதிகள் வெளிவந்ததாகத் தெரியவில்லை. எனவேதான் இந்த அகராதியை வெளியிட்டோம்" என்று தெளிவுபடுத்தினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி,

'தமிழில் அகராதி மரபும் மாற்றங்களும்' என்னும் பொருளில் தமது கருத்துக்களை முன்வைத்தார். "நண்பர் சிறிரஞ்சன் ஒரு பொதுவான வெளியீட்டுச் சாதனமாகக் கொள்ளாமல் வெளியிடப்பட்ட அகராதியை முதன்மையாகக் கொண்டு இதை ஒரு களமாக அமைத்துள்ளார். பழைய தமிழ்ச் சொற்களை அறிய நிகண்டைப் பயன்படுத்தினோம். நிகண்டில் கருத்துக்கள், சொற்கள் பேசப்படும்போது மேல் நாட்டவர்கள் தங்களது தேவைக்காக அகராதியைப் பயன்படுத்துகின்றார்கள். இன்றைய தேவைகருதி எமக்கும் அகராதியின் தேவை உணரப்பட்டுள்ளது' என்று கூறினார்.

'இலங்கையில் தமிழ் அகராதிகளுக்கான தேவைகளும் சவால்களும்' என்னும் தலைப்பில் அகவிழி, கூடம் ஆசிரியர் தெ.மதுசூதனன் உரையாற்றினார்.

'மொழிபெயர்ப்புத் துறையில் கவனம் செலுத்துகின்றவர்களுக்கு வழிசார்ந்த மொழியாடலைத் தெரிந்து தேடுவதற்கு அகராதியின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. 1960 க்குப் பின் தமிழில் கற்பித்தல் தொடங்கும் காலத்தில் இருந்துதான் இந்த அகராதியின் கவனம் ஈர்க்கப்பட்டது. விஞ்ஞானம், மருத்துவம் போன்ற துறைசார் நூல்கள் கொண்டுவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.'

'அகராதியின் முக்கியத்துவமும் பயன்பாடும்' என்ற தலைப்பில் பேராசிரியர் என். பாலகிருஷ்ணனும் 'இலங்கையில் அகராதி வெளியீட்டில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள்' என்ற தலைப்பில் குமரன் புத்தக இல்ல அதிபர் க.குமரனும் உரையாற்றினார்கள்.

நன்றி: ஞாயிறு தினக்குரல்

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 22 Jun 2024 07:41
TamilNet
HASH(0x55b6759f2f08)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 22 Jun 2024 07:41


புதினம்
Sat, 22 Jun 2024 07:41
     இதுவரை:  25243006 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 14367 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com