அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எனது நாட்குறிப்பிலிருந்து – 06   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: - யதீந்திரா  
Monday, 17 September 2007

தமிழ் சமூகத்தில் அறிஞர்கள் எழுத்தாளர்களின் இடம் ஒரு நெடுநாள் துயரம்.

01.

யதீந்திராசமீபத்தில் திருகோணமலையின் கலை இலக்கிய நண்பர்கள் சிலர், திருகோணமலையின் மூத்த கவிஞர் தாமரைத்தீவானின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்கான  பாராட்டு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பேசியவர்களில் நானும் ஒருவன். கவிஞர் தாமரைத்தீவான் ஒரு மரபுக் கவிஞர். திருகோணமலையில் மரபுசார்ந்து கவிதை எழுதும் இறுதி மனிதர் என்று அவரைச் சொல்லலாம். நான் மரபு சார்ந்த கவிதைகளில் ஈடுபாடு உள்ளவனல்ல எனினும் ஒரு இளைய தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற வகையில் எனது சில அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கிலேயே இந்நிகழ்வில் பேசுவதற்கு இணங்கியிருந்தேன். நாங்கள் பொதுவாக மேடைகளில் பேசும் போது வெளிப்படையாகப் பேசுவதில்லை. தனக்கு சரி என்று பட்டதை வெளிப்படையாகப் பேசும் அல்லது எழுதும் பழக்கம் நமது எழுத்தாளர்கள் பலரிடம் இருப்பதில்லை. நான் அன்று தமிழ் சமூகத்தில் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர், அவர்களின் இடம் என்ன? என்பது குறித்து எனது அவதானத்தை பகிர்ந்து கொண்டேன். எழுத்தாளர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கலைஞர்களை மதிப்பதில் தமிழ் சமூகம் அப்படியொன்றும் உயர்ந்த சமூகம் கிடையாது என்று நான் கூறிய கருத்து, அங்கிருந்த சிலருக்கு பிடிக்கவில்லை. எவருக்கு பிடித்தாலும் பிடிக்காமல் விட்டாலும் உண்மை உண்மைதான்.

02.
நாம் ஒரு சிந்தனையாளரின், படைப்பாளியின் சமூக நோக்கு பற்றி பேசுவோம் ஆனால் அவன் நோக்கிய, அவன் சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் சமூகத்தில் அவனது இடம் எப்படியிருக்கிறது என்பது பற்றி நாம் பேசுவதில்லை. அதிகார பீடங்களுடனும், ஆதிக்க சக்திகளுடனும் இணைந்திருக்கும் எழுத்தாளர்கள் நமது கண்ணுக்குத் தெரியுமளவிற்கு வறுமையில் வாடுவோர், விரக்தியால் எழுத்தும் மசிரும் என ஒதுங்கிக் கொள்வோர் பலரை நமக்குத் தெரிவதில்லை. ஆனால் அவ்வாறானவர்கள்தான் அதிகம். மறுமலர்ச்சி இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகச் சொல்லப்படும் அ.செ.முருகானந்தம் தனது இறுதிக் காலத்தை திருகோணமலை நிலாவெளி முதியோர் இல்லத்தில் கழித்தார் என்பது பலருக்கு தெரியாது. இது ஒன்று. தெரியாதது இன்னும் எத்தனையோ. இன்று சிறுகதையின் கொடுமுடி என சிலாகிக்கப்படும் புதுமைப்பித்தனின் இறுதிக்கால வாழ்க்கை எப்படியிருந்தது என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். நமது தமிழ் சமூகத்தில் இருக்கும் பெரிய சாபக்கேடே இருக்கும் போது ஒரு சிந்தனையாளனை மதிக்காமல் வறுமையில் வாடி உருக்குலைந்து அழிந்த பின்னர் போற்றுவது. தமிழ் சமூகத்தின் இந்த அழுகிய கூறுதான் நமது சூழலிலிருந்து இன்றுவரை மாபெரும் சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் உருவாகமல் இருப்பதற்கு காரணம். ஏனைய பல சமூகங்களிலும் இந்தக் கூறு இல்லாமலில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் தமிழ் சமூகத்தின் அழுகல் நிலை போன்று வேறு எங்கும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அதே வேளை கல்வியை அறிவு சார்ந்ததாகவும் சுயமரியாதை சார்ந்ததாகவும் பார்க்காமல் வெறும் அந்தஸ்த்து சார்ந்ததாக பார்க்கும் முன்னணி சமூகமொன்று இருக்கிறதென்றால் அந்த பெருமையும் நமது தமிழ் சமூகத்தையே சாரும். நமது கல்வி முதுகெலும்பில்லாதவர்களையும், குண்டி கழுவுபவர்களையும்தான் அதிகம் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இன்றும் விமர்சனத்தில் கைலாசபதி, சிவத்தம்பி நாவலில் டாணியல், ரகுநாதன் என்று சில பெயர்கள், சிறுகதையில் ரஞ்சகுமார், உமாவரதராஜன் என்று ஒரு பட்டியல் இப்படித்தான் நாம் பாராயாணம் ஓதப் போகிறோம் என்றால் நாம் எங்கே நிற்கிறோம். பிரச்சனை எங்கிருக்கிறது. புதிய தலைமுறையினருக்கு இலக்கியத்திலோ, ஏனைய சமூகம் சார்ந்த அறிவுத் துறைகளிலோ நாட்டமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சமூகத்தில் வித்தியாசமான துறைகள் குறித்து சிந்திப்பவர்களுக்கு மதிப்போ அங்கீகாரமோ இருப்பதில்லை. நமது சமூகம் ஏதோ தீண்டத்தகாதவைகளாக அவற்றை பார்க்கிறது. ஆனால் இந்த சமூகம் காலாதிகாலமாக நிலை பெற்றிருப்பதும் தனித்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதும் அறிவியல், கருத்தியல், இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்களால்தான். இதை விளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு, ஒரு மடையர் கூட்டம் கல்வி என்ற பேரில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. அந்த மடையர்கள்தான்; நமக்கான பேரறிவாளர்கள் போன்ற தோற்றம் நமது சமூகத்தின் அழுகிப்போன கூறுகளால் கட்டமைக்கப்படுகின்றது. இந்த அபத்தத்தை என்னவென்று சொல்வது. இன்னொரு வகையில் இந்த சமூதாயம் குறித்து சிந்திக்கும் ஒவ்வொரு எழுத்தாளனும் தனது வாழ்வில் தினமும் எதிர்கொள்ளும் சவாலிது. நான் எழுதத் தொடங்கிய காலத்தலிருந்து இந்த அபத்தத்தை எதிர்கொண்டு வந்திருக்கிறேன்.

எழுத்தாளன் என்பவன் காலத்தின் குரலாக தொழிற்படுபவன், ஒரு சமூகம் உயிர்ப்பாக இருப்பதற்கு அந்த சமூகத்தின் வரலாற்றை கலாசாரத்தை பேசும் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் தேவை. அவர்களை புறந்தள்ளும் சமூதாயம் தேக்க நிலைக்கு ஆளாக நேரிடும் இறுதியில் உருக்குலைந்து அழிந்து போகும். இன்றுவரை தமிழ் சமூகம் தனக்கானதொரு தனித்துவத்துடன் சுவாசிப்பதற்கு காரணம் இன்று நாம் கண்டு கொள்ளாத, மறந்து போன சிந்தனையாளர்களும், அறிஞர்களும்தான். அவர்களது காலத்தில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு இன்று நமக்கானதொரு வரலாற்றைச் சொல்கின்றது. தமிழர் வரலாற்றில் ஒரு உள்வட்டம் தன்னை வருத்தி இந்த சமூகத்தின் உயிரை காத்து வந்திருக்கிறது.

03.
தமிழர் வரலாற்றில் சிந்தனையாளர்கள் மதிக்கப்படாமல் போனது ஏதோ திடீரென்று தோன்றியதல்ல. அது ஒரு நீண்டகால துயரம். தமிழ்ச் சூழலில் அறிஞர்கள் போற்றப்பட்ட அரசனுக்கு நிகராக மதிக்கப்பட்ட வரலாறும் இருந்திருக்கிறது. ஆனால் பிற்காலங்களில் அது மங்கி மறைந்து விட்டது. தமிழ் வரலாற்றியலாளர்கள் கருத்துப்படி தமிழர் வரலாற்றில் இறுதியாக சோழப் பேரரசில்தான் அறிஞர்கள் மதிக்கப்பட்டதாக சொல்வர். செயங்கொண்டார் பாதம் தம்மை வணங்கினான் சோழனென நாளைய வரலாறு சொல்லட்டும் என்று சோழனே பாடியதாக சான்றுகள் உண்டு. அந்தளவிற்கு சோழப் பேரரசில் அறிஞர்கள் மதிக்கப்பட்டிருக்கின்றனர். பின்னர் தெலுங்கர், துலுக்கர், மாராட்டியர் என பலர் தமிழரை ஆட்சி செய்த போது அறிஞர்கள் சோற்றுக்காய் அலைந்து திரிந்தனர். இன்று வரை அவர்களது அலைச்சல் ஓயவில்லை. அறிஞர்களின் வாழ்வியல் நெருக்கடியை கி.பி 1686 – 1723 இல் வாழ்ந்த பட்டிக்காசு தம்பிரான் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்

அட கெடுவாய்| பல தொழிலிலும் இருக்க கல்வி
அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல்
திடமுளவோ கனமாடக் கழைக் கூத்தாடச்
செப்பிட வித்தைகள் ஆடத் தெரிந்தோம் இல்லை
தடமுலை வேசையராகப் பிறந்தோம் இல்லை,
சனியான தமிழை விட்டு தையலார்தம்
இடமிருந்து தூது சென்று பிழைத்தோம் இல்லை
என்ன சென்மம் எடுத்து உலகில் இரக்கின்றோமே  
                                    
(தனிப்பாடல்)

கழைக் கூத்தாடத் தெரிந்திருந்தாலும் பிழைத்திருக்கலாமே, வேசையாய்ப் பிறந்திருந்தாலாவது வாழ்ந்து இருக்கலாமே, பெண்களுக்காக தூது போய்ப் பழகினாலாவது துன்பம் இருந்திருக்காதே, சனியான தமிழை கற்று அல்லல் படுகிறோமே என்று வருந்துகிறார் தம்பிரான். தமிழ் சமூகத்தில் அறிஞர்கள் எவ்வாறு மதிக்கப்படுகின்றார்கள் என்பதை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.
புகழ்பெற்ற பிரித்தானிய ஓவியர் சாவ்ஸா ஆபாச ஓவியங்களை வரைந்தார் என்பதற்காக அவரது ஓவியங்கள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் சுவரோவியங்களை வரைந்து தனது வயிற்றுப்பாட்டை நிவர்த்தி செய்ய பேராடினார். அந்த காலத்தில் அவர் எழுதிய குறிப்பு மனதை நெருடுகிறது.
“வாழ்வில் என் பிரதான ஈடுபாடு ஓவியமோ எழுத்தோ சமூதாயமோ அல்ல. உணவுதான். ஆம், உணவுதான் பாப்கார்னிலிருந்து வறுத்த வாத்து வரை சாப்பிடக் கூடியது. எல்லாமே வயிற்றை நிரப்புவதுதான் நோக்கம். அதுதான் எனது முழு நோக்கம். வாழ்வில் இது தகுதியுடைவர்களிடையேயான போராட்டம். நான் எவ்வளவு தகுதி பெற்றிருக்க வேண்டுமோ அவ்வளவு தகுதி பெற்றிருக்கிறேன். நான் கணத்தில் அழிந்து போகும் பூச்சியல்ல. மனிதன். சாவு குறித்த எனது எண்ணங்களையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ளும்வரை நான் வாழப்போகிறேன்.”  (இந்து,12.3.89)

ஒரு கலைஞன் தனக்கான உணவை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறான் என்ற பிரச்சனைக்கு முன்னால் சாவ்ஸா ஆபாசப்படங்களை வரைந்தார் என்பது ஒரு விடயமல்ல. ஆபாசங்களுக்குத்தான் சமூகத்தில் விலையதிகமென்றால் அதனைத்தான் ஒரு சமூகம் விரும்புகிறது என்றால் கலைஞன் என்ன செய்ய முடியும். ஒரு எழுத்தாளனின், கலைஞனின் சமூகப் பொறுப்பு முக்கியமானதுதான் ஆனால் அதற்கு அவன் உயிர்வாழ்ந்தாக வேண்டும்.

உண்மையில் எழுத்தாளர்கள் கலைஞர்கள் என்போர் ஒரு தலைமுறையினது சாட்சியாக இருப்பவர்கள். ஆனாலும் அவர்களது வாழ்வு சோதனைகளுடன் கழிகிறது. அவர்களது அடிப்படையான வாழ்வியல் தேவைகளையே பூர்த்தி செய்து கொள்வதற்கு அவர்கள் பாடாய்ப் படுகின்றனர். சமூகத்தை ஏய்த்து பிழைப்பவர்கள், அரசியல் விபச்சாரம் புரிவோர் எல்லோரும் இந்த சமூதாயத்தில் பெரியமனிதர்களாக வலம்வர சதா இந்த சமூகம் குறித்து சிந்திக்கும் ஒரு சிந்தனையாளன், கலைஞன் அவர்களை சார்ந்து பிழைக்கும் இழி நிலைக்கு ஆளாகியிருக்கின்றான். ஒரு எழுத்தாளன், கலைஞன் அவனுக்கான சுயத்துடன் வாழ முடியாதபோது அவனிடமிருந்து வெளிப்படும் சிந்தனைகள், படைப்புக்கள் மட்டும் சமூகத்தை பேசுவதாக, அந்த தலைமுறையின் அரசியலை பேசுவதாக இருக்க வேண்டும் என நாம் எந்த அடிப்படையில் எதிர்பார்ப்பது. ஆனாலும் தனது காலத்தின் ஒடுக்குமுறைகளை அதற்கு எதிரான தனது தலைமுறையின் எழுச்சியை காலத்துடன் இணைந்திருக்கும் எந்தவொரு எழுத்தாளனும், கலைஞனும் தள்ளி வைக்கப் போவதில்லை. அப்படி தள்ளுபவன் ஒரு எழுத்தாளனாகவும் இருக்க முடியாது. சோழப்பேரரசின், அறிஞர்கள் மதிக்கப்பட்ட காலத்திற்காக நாம் காத்திருப்போம். நாம் இல்லாவிட்டாலும் நமது அடுத்த தலைமுறையாவது அதனை அனுபவிக்கட்டும்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 


     இதுவரை:  24716512 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4138 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com