Wednesday, 26 September 2007
விடுதலையின் விரிதளங்களும், வாழ்வின் புதிரான முடிச்சுகளும் - 06
01. வாழ்க்கையை அதன் ஒரு முனையில் இல்லாமல் பல முனைகளில் திறந்து காட்டிய - வாழ்க்கையை ஒருவருக்கு மட்டுமல்லாமல் எத்தனையோ முகம் தெரியாத மனிதர்களுக்காகவும் திறந்து காட்டிய ஒரு புரட்சிகரப் போராளியைப்போல் வாழ்ந்திருக்கிறேன். அதற்கு சாட்சியாகவும் இருந்திருக்கிறேன். -பாப்லோ நெருடா
02. எனது இருப்பே எனக்கு முதன்மையான உண்மை. எனது இருப்பு நிலையிலிருந்தே நான் என்னையும் இந்த உலகத்தையும் இனம் கண்டு கொள்கிறேன். நானே எனக்கு வெளிச்சம். நானே எனது வழிகாட்டி. நானே எனது இருப்பிற்கு ஆதாரம். என்னிலிருந்தே எல்லாம் எனக்குத் தோற்றப்பாடு கொள்கிறது.நான் வாழும் இந்த உலகமும், நான் உறவுகொள்ளும் மற்றவனும், என்னைச்சூழ இருப்புக்கொள்ளும் எல்லாமுமே எனது அனுபவ தரிசனத்தால் அர்த்தம் பெறுகிறது.
இந்த உலகத்தில் நான் ஒரு தனிமனிதப் பிறவி. இனம், மதம், தேசம், சமூகம், என்ற முழுமையில் - மொத்தத்தில்- கூட்டுறவில் நான் கட்டுண்டு கிடந்தபோதும் நிதர்சன வாழ்வில் நான் தனித்துவமானவன். முழுமை என்ற பெருவெள்ளம் என்னை அடித்துச்சென்ற போதும், நான் என்னை நானாக, ஒரு தனித்துவ ஜீவனாக, ஒரு சுதந்திரப்பிறவியாக, நானே எனக்குப் பொறுப்பானவனாக, நானே எல்லாவற்றையும் தெரிவு செய்பவனாக, தீர்மானிப்பவனாக, எனது வாழ்வனுபவத்திற்கு நானே உரித்தானவனாக, நான் என்னை, எனது தனித்துவத்தை உணர்கிறேன். மீளமுடியாதவாறு தனிமனிதம் என்ற சிலுவையில் நான் அறைபட்டுக் கிடக்கிறேன்.
இருப்பிய ((existentialism) தரிசனம் குறித்த விளக்கவுரையில் அன்ரன் பாலசிங்கம் - விடுதலை (பக்கம்- 209, 210)
03. எந்தப் பொருளுக்கும் ஒரு தன்னியக்கம் இருக்கிறது. உள்ளீட்டான சுய-இயக்கம் இருக்கிறது. இந்த சுய- இயக்கம் முரணிய தன்மையைக் கொண்டது. அதாவது ஒன்றுக்கொன்று மாறான, முரணான எதிர்வுத் தன்மைகளைக் (opposite tendencies) கொண்டது. ஒரு பொருளில் இந்த எதிர்வுத் தன்மைகள் ஒன்றித்திருக்கும் நிலை எதிர்வுகளின் ஒன்றியம் (unity of the opposites) எனப்படும். இந்த எதிர்வு சக்திகள் ஒன்றித்திருந்து அதே சமயம் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிகழ்த்தும் பிணக்காக, போராட்டமாக அந்தப்பொருளின் வாழ்வியக்கம் அசைகிறது. இந்த முரண்பாடு முற்றிவெடிக்கும் பொழுது மாற்றம் நிகழ்கிறது. புதியது பிறக்கிறது. எனவே, எந்தப் பொருளது இயக்கத்திற்கும், மாற்றத்திற்கும், புத்தாக்கத்திற்கும், புதிய வளர்ச்சிப்போக்கிற்கும் அந்தப் பொருளில் உள்ளீடாக - அதன் உள்ளியக்கமாகச் செயற்படும் முரணியமே காரணியாக இருக்கிறது. சிந்தனை உலகிலும் சரி, சமூக உலகிலும் சரி, இயற்கையின் சகல பொருட்களிலும் சரி தோற்றம், மாற்றம், முன்னேற்றம் என்பன புற சக்திகளால் தூண்டப்படுவதில்லை. அது உள்ளீட்டாக, உள்- முரண்பாட்டின் உந்துதலால் நிகழ்கிறது.
இயங்கியல் விதியின் (law of dialectics) அடிப்படையான முரணியம் (contradiction) பற்றி அன்ரன் பாலசிங்கம் - விடுதலை( பக்கம்- 112, 113)
01.
தத்துவம் என்பது தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு புள்ளியில் இருந்து பிறந்து சஞ்சரிக்கும் ஒரு விடயம். எனவே இத் தொடரை கடந்த பாகத்துடனேயே முடிவின்றி அப்படியே நிறுத்தியிருக்கலாம். ஆனால் எதற்குமே விசித்திரமான வியாக்கியானங்களை கொடுத்து கற்பனைகளை வளர்த்துக்கொள்ளும் எமது சமூக மனம் இதற்கும் ஏதும் விசித்திரங்களைக் கற்பித்துவிடக்கூடாது என்பதும் இம்முடிவுரையை எழுதுவதற்கான கூடுதல் காரணங்களில் ஒன்று.
இத்தொடரை இத்துடன் நிறுத்துவதற்கான முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது. அதாவது மிக எளிமையான மொழியில் எழுதப்பட்ட "விடுதலை" என் தொடரில் சற்று பூடகமடைந்துள்ளதாக நான் உணர்கிறேன். அடிப்படையில் நான் ஒரு விமர்சகன். அதன் அடிப்படையில் இத்தொடரை அன்றொரு நாள் முழுமையாக வாசிப்புக்குட்படுத்தியபோது இந்த அனுபவம் எனக்குக் கிட்டியது. இது அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதருக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் என்றே கருதுகிறேன். எழுதிய எனக்கே இந்த அனுபவம் கிட்டும்போது சாதாரண வாசக மனத்திற்கு எத்தகைய வாசிப்பு கிட்டியிருக்கும் என்று யோசித்ததன் விளைவும் இத் தொடரின் முடிவுக்குக் காரணம்.
நூற்றுக்கணக்கான பக்கங்களில் மிக விரிவாக எழுதப்பட்ட "விடுதலை" குறித்த எனது அனுபவப் பகிர்வுகளை ஒரு சில பக்கங்களில் அறிமுகம் செய்வதென்பது சற்று சிரமமான காரியமும்கூட. இத்தொடர் இருண்மையடைந்ததற்கான காரணங்களில் முதன்மையானது இதுதான் என்று நினைக்கிறேன்.
ஒரு சிறிய உதாரணம். பாலமுருகன் என்பவரால் எழுதப்பட்ட "சோழகர் தொட்டி" என்று ஒரு நாவல், வீரப்பன் கதை என்ற நண்பர் ஒருவரின் அறிமுகத்தைத் தொடர்ந்து இறுதியாக தமிழ்நாடு சென்றிருந்தபோது நானும் என் மனைவியும் கடை கடையாக அலைந்து திரிந்து அதை வாங்கினோம். (அதைப்படித்துவிட்டு அவள் கண்கலங்கியது இன்றும் என் மனத்திரையில் நிழலாடுகிறது. ஏனெனில் மெல்லிய மனம் படைத்தவர்கள் குறிப்பாகப் பெண்களால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் அந்நூலைத் தொடர்ந்து வாசிக்க முடியாது. அந்தளவிற்கு வன்முறை சித்திரிக்கப்பட்டுள்ளது.) மிகச் சிறந்த படைப்பு அது. வீரப்பன்தான் கதையின் மையமாக - அவரைச்சுற்றியே கதை பின்னப்பட்டிருந்தபோதும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் நாம் வீரப்பனைக் காண முடியாது. ஆனால் ஒவ்வொரு பக்கத்தையும் வீரப்பன் கடந்தபடியே இருப்பார். வீரப்பனை பிடிப்பதாகக்கூறி காட்டுக்குள் நுழைந்து மலைவாழ்மக்களின் வாழ்வியல்மீது கர்நாடக- தமிழ்நாடு கூட்டு விசேட அதிரடிப்படையினர் நடத்திய வன்முறையிலிருந்து பிறந்ததே இப் படைப்பு.
இதே போன்ற ஒன்றுதான் எனது சுயவரலாற்று நூலும். "விடுதலையையும்" அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதர் குறித்தும் நேரடியான தரிசனம் ஒன்றை நீங்கள் என்நூலில் காணமுடியாது. ஆனால் விடுதலையின்வழி வெளிப்பட்ட அன்ரன் பாலசிங்கம் என்ற ஆளுமை என்நூலின் பெரும்பாலான பக்கங்களை கடந்தபடியே இருப்பார். நூல் வெளிவரும்போது அதை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள். "விடுதலை" குறித்து விரிவாக - எளிமையாக ஆனால் நுட்பமான ஒரு உத்தியைக் கையாண்டு எழுதியிருக்கிறேன்.
அதை பிடித்து கண்முன்னால் நிறுத்துவதென்பது சற்றுக் கடினமாக இருக்கிறது. எனவே இத்தொடரை நிறுத்தி துரிதமாக நூலை வெளியிடுவதே சிறந்ததென்று நினைக்கிறேன்.
அன்ரன் பாலசிங்கம் மறைவிற்கு முன்னரும் சரி பின்னரும்கூட அவரை எல்லாவழியிலும் புரிந்துகொண்ட ஈழத்தமிழ்சமூகம் அவரது தத்துவ அடையாளத்தைக் காணத்தவறியிருந்தது. இதை அடையாளங்கண்டே அவருடைய பன்முக அடையாளத்தை உலகறியச் செய்யும் நன்நோக்கத்தடன் "அப்பால் தமிழ்" குழுமத்தினர் என்னை அணுகி எனது நூலிலுள்ள "விடுதலை" குறித்த விடயங்களை சுருக்கி எழுதித்தருமாறு கேட்டிருந்தனர். எனது சுயவரலாற்றில் கலந்துள்ள அந்த விடயத்தை எப்படி பிரித்தெழுதுவதென்று தெரியாமலேயே ஒப்புக்கொண்டேன்.
எனது சுயம் குறித்த தரவுகள் அதிகமாக வருமே என்ற ஐயத்தை வெளியிட்டதற்கு அது விடுதலையை நெருங்கச்செய்வதற்கான ஒரு உத்தியாக இருக்கும் தயங்காமல் எழுதுங்கள் என்று ஊக்குவித்திருந்தனர். அவர்களுடைய நோக்கம் மிகத்தெளிவானது. ஒரு தத்துவார்த்த ரீதியான முற்போக்கான ஈழத்தமிழ் சமூகத்தைக் கனவு கண்டு எழுதப்பட்ட "விடுதலை" ஈழத்தமிழர்களால் பரவலாக வாசிக்கப்படவேண்டும், அதனூடாக அன்ரன் பாலசிங்கம் என்ற ஆளுமையின் பணியின் ஆழம் புரியப்பட்டு அவருடைய வெற்றிடம் இட்டுநிரப்பப்படவேண்டும் என்பதாக அது இருந்தது. இத் தொடரினூடாக அவர்களுடைய நோக்கத்தின் பெரும்பகுதியை நிறைவேற்றிவிட்டதாகவே நம்புகிறேன். ஏனெனில் பலராலும் கவனிக்கபடாதிருந்த "விடுதலை" இன்று தீவிரமான வாசிப்புக்குட்பட்டிருப்பதும் அது குறித்த சில விவாதங்கள் மேலெழுந்துள்ளதுமே அதற்கு சாட்சிகள். எனது சுயவரலாற்று நூல் வெளிவரும்போது அது ஈழத்தமிழ்ச்சூழலில் மேலும் சில அதிர்வுகளை ஏற்படுத்தும் என்றே நம்புகிறேன்.
நான் முன்பே அன்ரன் பாலசிங்கம் அவர்களிற்கான அஞ்சலிக்குறிப்பில் பின்வருமாறு எழுதியிருந்தேன்: "அன்ரன் பாலசிங்கம் அவர்களை ஒரு சட்டகத்துக்குள் வைத்து நாம் மதிப்பிடக்கூடாது. அது நாம் அவருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகத்தான் இருக்கும். அவர் தமிழினத்திற்கு மட்டும் உரியவரல்ல. ஏனெனில் அவர் ஒரு விடுதலையின் வடிவம். அவர் தான் கற்ற தத்துவங்களையும் கோட்பாடுகளையும் வைத்து அடக்குமுறைகளுக்கு ஒடுக்குமுறைகளுக்கெதிரான ஒரு வடிவத்தை தமிழீழ விடுதலையினூடாக முன்வைத்திருக்கிறார். எனவே இந்த விடுதலை வடிவம் உலகில் ஒடுக்கப்படும் அடக்கப்படும் வேறொரு இனத்திற்கும் பொருந்தும். ஆகவே இதை சரியான முறையில் ஆய்வு செய்து எமது விடுதலையை வென்றெடுப்பதுடன் உலக பொது விதியாகவும் முன்வைக்க வேண்டும். பல உலக விடுதலை தத்துவார்த்த முன்னேடிகளுடன் ஒப்பிட்டு ஆழமாக பகுப்பாய்வு செய்யப்பட வேண்டியவர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். அந்த ஆய்வு நிச்சயமாக உலகிற்கு ஒரு போராட்ட வடிவத்தை வழங்கும். அதுதான் எமது போராட்டத்தை விரைவுபடுத்துவதற்கான வழி. அது மட்டுமல்ல எமது விடுதலைக்கான வழியும் கூட அதுதான்." எனவே அன்ரன் பாலசிங்கம் அவர்களை புரிதல் என்பது ஒரு தொடர் இயக்கம் என்பதுடன் விடுதலையைத் தீவிரப்படுத்தலுமாகும். வரும் நாட்களில் பல்கலைக்கழக சமூகங்களிடமிருந்து, அறிவுஜீவிகளிடமிருந்து மற்றும் படைப்பாளிகளிடமிருந்து அன்ரன் பாலசிங்கம் குறித்த -அவரது தத்துவ அடையாளம் குறித்த - அவரது அரசியல் பன்முகம் குறித்த ஒரு திறந்த ஆரோக்கியமான உரையாடலை வெகுஜன ஊடகங்கள்வழி எதிர்பார்க்கிறேன். அதன் வழி அவரது முற்றுப்பெறாத உரையாடலை நாம் ஒவ்வொருவரும் நீட்டிச்செல்வோம்.
இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts) |