அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 40 arrow ஒரு பயணமும் சில நினைவுகளும்.. 02.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஒரு பயணமும் சில நினைவுகளும்.. 02.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Friday, 12 October 2007

02.

(இதன் முதல் பகுதியை படிக்க...)

'நான் எதையெல்லாம்
உங்களில் தொற்ற வைத்தேன்?
நீங்கள் எவற்றையெல்லாம்
எடுத்துக் கொண்டீர்?
நான் அறியேன்.
ஆனால் நான் கனிந்தேன்
உங்கள் தோளணைவால்
வெம்பலாகாமல்.'
எனது 'முகம் கொள்'  கவிதைத் தொகுப்பில் இப்படி எழுதியிருந்தேன். இன்றைய எனது ஆளுமையும், முதிர்ச்சியும் தமிழக நண்பர்ளே  நீங்கள் எனக்களித்த கொடைகள்தான்.  கோடம்பாக்கத்தில் நின்று கொண்டிருக்கையில் உங்கள் ஒவ்வொருவரையும் சந்தித்தாக வேண்டும் என்னும் வெறி மேலோங்கிய வண்ணமே இருந்தது. எனக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒருமாத விசாவில் இது சாத்தியமாகுமா என்னும் கேள்வியும் அலைக்கழித்தவண்ணம் இருந்தது. இயற்கைவேறு திட்டமிடவும் நடமாடவும் தடைவிதித்த வண்ணமே இருந்தது. இறக்கை கட்டி பறப்பது ஒன்றுதான் வழி. இறக்கை முளைக்க வேண்டுமே.
கோடம்பாக்கத்தில் இருந்து திரும்பும் வழியில் மித்ர பதிப்பகம் சென்றேன். அது கோடம்பாக்க மேம்பாலத்தின் கீழே முரசொலி நிறுவனம் இருக்கும் கரையில்  இருந்தது. மேம்பாலத்தின் இருகரையிலும் தற்போது கொண்டாட்ட அழைப்பிதழ்கள், வாழ்த்துமடல்கள்  தயாரிக்கும், அச்சிடும் நிறுவனங்கள் நிறைந்திருந்தன. 
மித்ர பதிப்பகம் ஈழத்தின் முக்கிய மூத்த படைப்பாளிகளில் ஒருவரான எஸ்.பொ. அவர்களால் நடாத்தப்படுவது. நான் மிக ஆர்வத்துடன் வாசித்த ஈழத்து எழுத்தாளர்களில் எஸ்பொவும் ஒருவர். அப்போது அவரை ஈழத்து ஜெயகாந்தன் என்று அழைத்தனர். அவ்வேளையில் ஜெயகாந்தனின் தீவிர வாசகனாகவும் இருந்தேன்.(நான் சொல்வது 1970 ம் ஆண்டுக் காலகட்டத்தை) அதுவும் எஸ்பொ அவர்கள் மீதான ஈர்ப்புக்கு காரணமாக இருநதிருக்கலாம். நான் முதலில் வாசித்த எஸ்பொவின் படைப்பு தீ என்னும் நாவலாகும். தீ நாவல் எனககுள் ஏற்படுத்திய அதிர்வுகள் பல பரிமாணம் கொண்டவை. அதேபோல் யாழ்பாண சமூகத்தின் அதாவது யாழ்ப்பாணத்தானின் மனோநிலை எழுத்தில் வடித்து காட்டியதில் அவரது சடங்கு நாவல் முதன்மையானது என்பது என் கருத்து. அவ்வேளையில் கொழும்பு வராப்பத்திரிகை வெளியிட்டிருந்த அவரது பேட்டி ஒன்றும் இன்றைக்கும் என் நினைவில் இருக்கின்றது. அந்த பேட்டியில் 'கார்காத்த குலத்தில் பிறந்து நாவலர் தமிழ் காத்தார் என்றால் பனைகாத்த குலத்தில் பிறந்து தமிழ் காத்தவன் எஸ்பொ.' எனத் தெரிவித்திருந்தார்.  அப்போதைய அவரது வித்துவ கர்வம் என்னைக் கவர்ந்திருந்தது. தனது தந்தையார் இறந்த பின்னான கல்வெட்டு நூலுக்கு அப்பையா காவியம் எனப் பெயரிட்டிருந்ததும், அதுவொரு புதிய முயற்சியாக இருந்ததும் நினைவில் உண்டு. இதுவரை அவரை நான் நேரில் சந்தித்தில்லை. அவர் ஐரோப்பாவிற்கு வந்து சென்ற போதிலும் அவரைச் சந்திக்க முடியவில்லை. வட்டங்களுக்குள் அவர் அடைபட்டிருக்க கூடும். அவருடைய 'பனியும் பனையும்' தொகுப்பு ஒரு சாதனை முயற்சி. புலம்பெயர்ந்தோரின்  படைப்பிலக்கியம் தமிழிலக்கியத்திற்கு தலைமைதாங்கும் என்னும் அவரது கனவு என்னுள்ளும் இருந்தது. ஆதலால் அவரைச் சந்தித்து வணக்கத்தை தெரிவிப்பது நோக்கமாக இருந்தது. பக்கத்தில்தான் எம்.ஏ.ரஹ்மானுடைய இருப்பிடமும் இருந்தது. கொழும்பில் இருந்து சென்னைவரை எஸ்பொவும், எம்.ஏ.ரஹ்மானும், இணைந்தே செயல்பட்டவர்கள். தற்போது தனித்தனியாக பிரிந்திருந்தார்கள். கொழும்பில் இருந்ந எம்.ஏ.ரஹ்மானுடைய அரசு பதிப்பகத்திற்கு முன்பு சென்றிருக்கின்றேன். ஈழத்து பதிப்புதுறையில் அரசு பதிப்பகம் முக்கிய பாத்திரம் வகித்தது. எஸ்பொவின் பல நூல்கள் எம்.ஏ.ரஹ்மானுடைய அரசு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டவை. நானும் எழில் இளங்கோவனும் மித்ர பதிப்பகத்துள் நுழைந்தோம். எஸ்பொ படங்களில் பார்த்ததுபோல் மாறாமல் இருந்தார். அண்மையில் அவர் வெளியிட்ட சாந்தனின் சிறுகதை தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தார். அவரை ஒளிப்படமாக பதிவு செய்தேன். சிறிது நேர உரையாடலின் பின் அங்கிருந்து புறப்பட்டேன்.
மித்திரவை தாண்டி நடந்தால் சூளைமேடு நெடுஞ்சாலை தொடங்குகிறது. அந்த தெரு அப்படியே தொடந்து பச்சையப்பன் கல்லூரிக்கு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏறுகின்றது. அவ்வேளையையில் இந்தப் பகுதியில் எல்லாம் ஈழத்து நண்பர்கள் குறிப்பாக ஈரோஸ் அமைப்பில் இருந்து பிரிந்த ஈபிஆர்எல்எப் அமைப்பினரின் குடியிருப்புகள் பணிமனைகள் இருநதன. தமிழக - ஈழ நட்புறவுக் கழக செயலாளர் அரணமுறுவலின் வீடு இங்கிருந்தது. பச்சையப்பா கல்லூரி தத்துவ பேராசியர், மேடைப் பேச்சளார் பெரியார்தாசனின் வீடு பச்சையப்பா கல்லுரிக்கு அருகில் இருந்தது. இப்போது அவர்கள் வீடுமாறி இடம்மாறி சென்றுவிட்டனர். வேறு நண்பர்கள் யாரும் அங்கு குடியிருப்பதான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்களை நினைத்த வண்ணம் லிபர்ட்டி தியேட்டர் பக்கம் நடந்தேன்.
இந்த மேம்பாலத்தில் வைத்துத்தான் ஒரு மாலைப்பொழுதில் (1980 -1981 ஆக இருக்கலாம்)  வீட்டிற்கு கால்நடையாக சென்றுகொண்டிருந்த கவிஞர் வைரமுத்துவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அன்றைய காலைத் தினசரி ஒன்றில் அவர் எழுதிய கவிதையை படித்திருந்தேன்.
பாலத்தின் கீழிருந்த சிறுசந்து வழியாக மறுகரைக்கு வந்து  டிரஸ்ட் புரத்துக்குள் நுழைந்தேன்.  இங்குதான் கவிஞர் வைரமுத்து வாடகை வீட்டில் வசித்து வந்தார்.  1983ல் கலவரத்தின்போது சுவரொட்டி தயாரிப்பதற்கு அவர் நிதியுதவி அளித்தது நினைவில் வருகின்றது. கலவரத்தை ஒட்டி சுவரொட்டி தயாரித்து ஒட்டுவதற்கு நிதி கேட்டு சென்றிருந்தேன். பெரியார்தாசன்தான் அழைத்துச் சென்றிருந்தார். சில அலைக்கழிவுகளின் பின்தான் வைரமுத்துவை சந்திக்க முடிந்தாலும். நிதி தந்துதவினார். சுவரொட்டி பலருடைய கவனத்தையும் கவாந்திருந்தது. அதில் எழுதியிருந்த கவித்துவமாக வாசகங்கள் தன்னால் எழுதப்பட்டதாய் எங்கோ வைரமுத்து சொன்னதாய் தகவல்கள் வந்தன. ஆனால் பின்னர் பெரியார்தாசனால் மறுப்பு கூறப்பட்டது.
நண்பர்களே
நாம் இரவோடிரவாக அச்சுவரொட்டியை ஒருவர் ஒருவர் முதுகில் ஏறி நின்றபடி சென்னை நகரம் முழுவதும் ஒட்டிய நினைவுகளில் ஒரு கணம் மூழ்கினேன். இரவு சுவரொட்டியை ஒட்டிவிட்டு காலையில் எழுந்து ஒட்டியவற்றை மக்கள் பார்க்கிறார்களா படிக்கிறார்களா என அறிய நகர்வலம் வந்த அந்த உற்சாகம் இப்போதும் நெஞ்சில் எழுகின்றது.1987ல் பூமாலை நடவடிக்கை என்ற குறியீட்டு பெயருடன் இந்திய விமானங்கள் யாழ்பாணக் குடாநாட்டில் உணவுபொட்டலங்களை போட்ட அன்று மாலையில் நானும் கலைஞர் லடீஸ் வீரமணியுமாக புண்பட்ட நெஞ்சை போதையால் ஆற்றியதும் இந்த தெருக்களில்தான். எனது முகம்கொள் கவிதைத் தொகுப்பில் உள்ள மாலை விழுந்தபின் முன்னிராப் பொழுதொன்றில்.. கவிதை ஊற்றெடுத்ததும் அந்தப்பொழுதில்தான்.   கோடம்பாக்கம் இன்னும் இன்னும் அதிக நினைவுகளை கிளறியவண்ணமே இருந்தது.
கோடம்பாக்க மேம்பாலத்தால் ஏறி இறங்கி வள்ளுவர் கோட்டத்தால் திரும்பியது வண்டி. வள்ளுவர் கோட்டத்தின் அருகேயான குளம் நிரப்பட்டு கட்டிடங்கள் எழுந்து விட்டதால் வள்ளுவர்கோட்டத்தின் கம்பீரம் தொலைந்துபோய் இருந்தது.  வள்ளுவர் கோட்டத்தின் நிர்வாக பணிமனையில் தமிழறிஞர் தா.கோவேந்தன் அவர்களின் மூத்தமகன் பணியாற்றினார். அவர் இந்திய பொதுவுடமை இயக்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். இம்முறை பயணத்தில் அவரைச் சந்திக்க முடியவில்லை. கோடம்பாக்கம் பகுதியில் இருந்து வீடுமாறிச் சென்றுவிட்டனர். அவரது தந்தையார் தா.கோவேந்தன் அவர்களும் இறந்துவிட்டார். ஓய்வு நேரங்களில் வள்ளுவர் கோட்டத்திற்கு செல்லும் வேளைகளில் அவருடன் அரசியல் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதுண்டு. சிலவேளைகளில் இரகசிய நண்பர்களின் சந்திப்புக்காகவும் செல்வதுண்டு. வள்ளுவர் கோட்டத்தை இப்போது மீள சென்று பார்க்க ஆர்வமாக இருக்கவில்லை.
நான் தற்போது அண்ணாசாலையில் அண்ணா சிலைக்கு அருகே உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் ஏறிக்கொண்டிருந்தேன்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...
ஒரு பயணமும் சில நினைவுகளும்...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 19 Apr 2024 07:28
TamilNet
HASH(0x55ed5684a090)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 19 Apr 2024 07:36


புதினம்
Fri, 19 Apr 2024 07:36
















     இதுவரை:  24782255 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5839 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com