அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 10 May 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 29 - 30   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 30 January 2008
29.
மீண்டும் வைகாசிப் பொங்கல் வந்தது. வற்றாப்பளைப் பொங்கலுக்கு இரண்டு மூன்று நாட்கள் இருக்கையிலே, நிர்மலாவும், பவளமும் தத்தம் கணவன்மார் சகிதம் வந்துவிட்டனர். சித்திரா மிகவும் உற்சாகத்துடன் அவர்களை வரவேற்றாள். 
பொங்கலுக்கு முதல்நாள் மாலை, கங்காதரனும் அங்கு வந்தபோது, வன்னியராசனுக்கும் சிவகுருவுக்கும் அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள் சித்திரா. அவர்கள் எல்லோருமாய்க் கூடிப்பேசுகையில் வீடே மிகவும் கலகலப்பாக இருந்தது.
அவர்களுடன் உற்சாகமாகக் கலந்துகொண்ட சித்திரா, 'ஏதோ கடவுள் செயலாலை வன்னியா குடும்பத்திலை பிறகும் சந்தோஷம் ஏற்பட்டிருக்குது! .. நாங்கள் எல்லாருமாய்ச் சேர்ந்து பாழடைஞ்சு போய்க் கிடக்கும் எங்கடை கோயிலைத் திருத்தோணும்! .. இந்தக் கோயில் காணி எல்லாத்தையும், எங்கடை ஊரிலை காணி பூமி இல்லாத ஆக்களுக்குப் புறிச்சுக் குடுக்கோணும்! ... காடாய்க் கிடக்கிற இந்தக் குமாரபுரத்திலை முந்தின காலம் போலை சனம் வந்து குடியேறவேண்டும்! .. அப்பதான் எங்கடை வன்னியா குடும்பத்துக்கு இருக்கிற பழி தீரும்!" என்று கூறுகையில் அவளுடைய முகத்திலேயும், பேச்சிலேயும் காணப்பட்ட குதூகலம் அவளுடைய சகோதரிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. 'கன நாளைக்குப் பிறகு அக்கா சந்தோஷமாய் இருக்கிறா!" என அவர்கள் மகிழ்ந்து போனார்கள்.
சித்திராவில் தற்போது ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் கங்காதரனும் கவனித்தான். ஆயினும் அவனால் சித்திராவின் எண்ணங்களையோ, போக்கையோ புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.
மூன்று வருடங்கள் கழிந்தபின் அவன் முதன் முதலில் வாழைகளின் நடுவே சிலையாகிப் போய்நின்ற சித்திராவைக் கண்டபோதே அவளுடைய கோலத்திலேயும், குணத்திலேயும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததை அவளும் அவதானிக்க முடிந்தது, உணரமுடிந்தது.
மூன்று வருடங்களுக்கு முன்பு அவனைத் தனிமையில் சந்ததிக்க ஓடிவந்த சித்திராவாக அவள் இல்லை. அன்று ஒரு அருவியைப் போலப் பொங்கிச் சிரித்துப் பாயத் துடித்த அந்த அழகு, இன்று ஒரு கட்டுக்கோப்பினுள் அடங்கிப் போய்க் கிடக்கும் ஒர ஆழமான குளத்தைப்போல அமைதியுடன் பிரகாசித்தது. அன்றைய சித்திராவின் கருநாவற்பழ விழிகளிலே தேங்கி நின்று, ஆழமும் அழகும் காட்டிய அற்புதக் கனவுகள் இன்று அங்கே இல்லை. ஒரு பார்வையிலேயே சகலதையும் புரிந்து கொள்ளக்கூடிய தீட்சண்யம் அங்கே குடி கொண்டிருந்ததாகக் கங்காதரனுக்குத் தோன்றியது.
நீண்டகால இடைவேளைக்குப் பின், தன்னை முதலில் கண்டபோது திகைத்துப்போய்ச் சிலையாக நின்ற சித்திரா சட்டென்று தன் காலடியிலே விழுந்து கோவெனக் கதறியதும், பெத்தாச்சி இறக்கும் தறுவாயில் வெளிவிட்ட விஷயத்தைக் கூறி, நான் உங்களைப் புரிந்துகொள்ளாமல் பேசிவிட்டேன், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் எனத் தேம்பியழுதபோது அவன் மனம் அவளுக்காக அரற்றியது. 
உணர்ச்சி மேலீட்டால் அவள் பற்றுக்கோடில்லாமல் புயலில் அடிபட்டுப் போய்க் கிடக்கும் இளங்கொடியைப் போலத் தன் பாதங்களருகில் துவண்டு கிடந்து குமுறியழுகையில், ஆரம்பத்திலேயே கருகிப்போன அவள் வாழ்வை மீண்டும் மலர வைக்கவேண்டும், தான் நிச்சயமாக சித்திராவை மணந்து கொள்ள வேண்டும் என்று அவன் தன்னுள் தீர்மானித்துக் கொண்டான்.
அந்தத் தீர்மானத்தின் ஒரு செயற்பாடாகவே அவன் தன் காலடியிலே கிடக்கும் அவளை அணைத்து ஆறுதல் கூறவேண்டுமென எண்ணி அவளைத் தொட்டுத் தூக்கிவிட முயற்சித்தான். அவனுடைய கைகள் அவள்மேல் பட்டதும் மெல்ல எழுந்து விலகிக் கொண்ட சித்திரா அவனை மீண்டும் நோக்கி, வாருங்கோ வீட்டை போவம்! என அழைத்தபோது, அவள் தன் உணர்ச்சிகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடக்கிவிட்டதை அப்போதே கங்காதரனால் உணரமுடிந்தது. தன்னைக் கண்டதும் இளகி உருகி மனம்விட்டு அழுத அவள் மீண்டும் இறுகிப் போய்விட்டபோது, கங்காதரனால் அவளை மீண்டும் அன்றைய பழைய சித்திராவின் ஸ்தானத்தில் வைத்துப் பழக முடியாது போய்விட்டது.
அந்தச் சம்பவத்தின் பின்பு அவன் அடிக்கடி தோட்டத்திற்கு வந்துபோகும் சமயங்களில் சித்திரா, விஜயாவையும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவர்களை விட்டு மெல்ல விலகிச் சென்றுவிடுவதையும் அவன் கவனிக்காமலில்லை. அந்நேரங்களில் அவனுடைய இதயம் சித்திராவின் அனாதரவான நிலைகண்டு இரங்கியபோதும் அன்றைய சித்திராவை அதிகமாக ஞாபகப்படுத்தும் இன்றைய விஜயாவின் குழந்தைத்தனமான பேச்சிலும், குதூகலமான இயல்பிலும் தன்னை மறந்து கலந்து கொள்வதில் அமைதியடைந்தான்.
ஆனால் கடந்த சில நாட்களாகச் சித்திராவின் போக்கிலே வெளிப்படையாய்த் தெரிந்த சில மாற்றங்களைக் கண்டபோது, அவன் அந்த மாற்றங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கவே செய்தான். பொங்கலையொட்டிச் சகோதரிகள் குடும்ப சகிதமாக வந்து தங்கியிருந்த இந் நாட்களில் அவள் யாவருடனும் கலந்துகொண்டு கலகலப்பாக இருந்தது தனக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர் அனைவருக்குமே சந்தோஷத்தை ஏற்படுத்தியதை அவனால் உணரக் கூடியதாக இருந்தது.
அதுமட்டுமல்ல, வன்னிச்சியா குடும்பத்தின்மீது கவிந்து நின்ற பழி இன்று நீங்கிவிட்டது. அந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான கோவிலின் எஞ்சிக் கிடக்கும் எழுபது ஏக்கர் நிலத்தையும், ஏழை மக்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும், பாழடைந்த கோவிலைப் புதுப்பித்துப் பொதுமக்களின் பொறுப்பில் அதை விடவேண்டும், என்றெல்லாம் சித்திரா தன் எண்ணங்களைக் கூறிய சமயங்களில் அவளுடைய முகத்தில் ஒளிவிட்ட ஆர்வத்தையும், விழிகளில் கோடிகாட்டிய இலட்சியக் கனவுகளையும் கண்ட கங்காதரன், சித்திராவுக்கும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டிருக்கின்றது என்பதை உணர்ந்து மகிழ்ந்தான். 
அவளுடைய இந்தப் புதிய உற்சாகமும் ஊக்கமும், அவன் தன் மனதிலே கொண்டிருந்த எண்ணத்தைச் சீக்கிரம் செயலாக்க வேண்டும் என்ற தவிப்பை அவனுடைய உள்ளத்தில் ஏற்படுத்தின. மிகவும் விரைவில் தான் சித்திராவைக் கண்டு தன் எண்ணத்தை அவளுக்குக் கூறவேண்டும், சித்திராவைத் தன் மனைவியாக்கி அவளை மீண்டும் வாழவைக்க வேண்டும் என்று கங்காதரன் காத்திருந்தான்.
சில சமயங்களில் அச் சந்தர்ப்பங்கள் அவனுக்குக் கிட்டியபோதும், சட்டென்று தன் இதயத்தைத் திறந்து அவளுக்குக் காட்டிவிட அந்நேரங்களில் அவனால் முடியாமலிருந்தது. அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்த ஒரு ஒளிமயமான வட்டத்தினின்றும் அவள் அடிக்கடி வெளியே வந்து சாதாரண சித்திராவாகப் பேசிப் பழகி உலவி வந்தபோதும், அவளைச் சுற்றியமைந்த அந்தப் பிரத்தியேக வட்டத்தினுட் பிரவேசிப்பதற்கு அவன் மனம் தயங்கியது. என்னைத் தவறாக எடை போட்டு விட்டீர்களே அத்தான்! என்று அவள் சொல்லி விடுவாளோ என்ற ஒரு ஐயம் அவன் ஆசைகளுக்கும், எண்ணங்களுக்கும் காவல் போட்டுக் கொண்டிருந்தது. மொத்தத்தில் சித்திராவையும் அவளுடைய சிந்தனைகளையும் புரிந்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் கங்காதரன்.
எனினும் இந்த நிலையிலே நான் வெகுகாலம் காத்திருக்க முடியாது. உத்தியோக நிமித்தம் நான் ஊரைவிட்டுப் புறப்படுவதற்கு முன் எப்படியாவது சித்திராவிடம் இந்த விஷயத்தையிட்டு மனந்திறந்து பேசி, ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்ற திட சித்தத்துடன், ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தான் கங்காதரன்.
 
000
பொங்கலுக்கு முதல்நாள் ஊர் களைகட்டி விட்டிருந்தது. அன்று மாலை கங்காதரன் தோட்டத்துக்குச் சென்றபோது, சித்திரா தோட்டத்தின் கிழக்குக் கோடியிலிருந்த துரவில் எருதுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.
அவளுடன் தனியே பேசுவதற்கு இது நல்ல சமயம் என எண்ணிய கங்காதரன், துரவடிக்குச் சென்றபோது, சித்திரா இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு தண்ணீரை வாரியள்ளி எருதைத் தேய்த்துக் குளிக்க வார்த்துக் கொண்டிருந்தாள். ஏற்கெனவே குளிப்பாட்டப்பட்ட மற்ற எருது துரவடியில் நின்றது.
அவனைக் கண்டதும் சித்திரா முகம் மலர்ந்தவளாய் சிரித்தாள். மாலைநேரப் பொன் வெய்யிலில், தங்கமாய்ப் பளபளத்த அவளுடைய முகத்தின் சோபை கங்காதரனடைய மனதை ஈர்த்தது. 
எப்படித் தொடங்குவது? எப்படிக் கேட்பது? என்று கரையில் நின்றவாறே, தன்னுடைய காரியத்தில் கவனமாக இருந்த சித்திராவை நோக்கினான் கங்காதரன். சித்திரா மீண்டும் நிமிர்ந்து அவனைப் பார்த்தபோது, அவன் அமைதியாகத் தன்னையே பார்த்து நிற்பதைக் கண்டு சற்று சங்கோஜப்பட்டவளாய் எருதின் மறைவிலே நின்றுகொண்டு தன் வேலையைத் தொடர்ந்தாள். அவளை அறியாமலே அவளுடைய கரம் சற்று விலகியிருந்த தன் முந்தானைச் சேலையைச் சரி செய்து கொண்டது.
அங்கே நிலவிய ஒரு சங்கடமான சூழலை மாற்றிவிட வேண்;மென முயற்சிப்பது போல,'எப்ப அத்தான் நீங்கள் கொழும்புக்குப் போறியள்?" என்று எருதைத் தேய்த்துக் கொண்டே சித்திரா கேட்டாள்.
அவளுடைய கேள்வியிலேயும், குரலிலேயும் தொனித்த சாதாரணமான, சகஜமான சுபாவம் தன் எண்ணத்தை எல்லாம் கொட்டித் தீர்த்துவிடும் நிலைக்கு வந்திருந்த கங்காதரனைச் சட்டென்று தரைக்குக் கொண்டு வந்துவிட்டது.
தான் நினைத்ததைக் கேட்பதற்கு இது சரியான சந்தர்ப்பம் அல்ல என எண்ணிய கங்காதரன், 'பொங்கல் முடிஞ்சதும் போகவேணும் சித்திரா!" என்று கூறியவன், சில கணங்களின் பின்னர், 'நீயும் பொங்கலுக்கு வருவாய்தானே?" என ஆவலுடன் கேட்டான்.
அவனுடைய முகத்தின் பாவம், கண்களில் தெரிந்த ஆர்வம், ஏக்கம் இவையெல்லாம், நாளையிரவும் வருவேன்! கட்டாயம் காத்திரு! என்று கங்காதரன் முன்பு புன்னை மரத்தடியில் கூறும் வாசகங்களை அவளுக்குச் சட்டென நினைவூட்டின. அவளுடைய முகம் குப்பெனச் சிவந்தது.
தன்னுடைய முகத்தில் தோன்றும் உணர்வுகளைக் கங்காதரன் கண்டுகொள்ள முடியாதபடி, எருதைத் துரவினின்றும் வெளியே கொண்டுவரும் சாக்கில் திரும்பிக் கொண்ட சித்திரா, 'இனிமேல் எனக்கு ஏனத்தான் பொங்கலும் .... திருவிழாக்களும்!" என விரக்தியுடன் கூறிக்கொண்டே எருதுகளை மாட்டுக் கொட்டகைப் பக்கமாக நடத்திக் கொண்டு சென்றாள் சித்திரா.
அவள் எப்படித்தான் சாதுரியமாகத் தன் உணர்வுகளை மறைக்க முயன்றபோதும், அவள் தன் முகஞ்சிவக்கத் தலை குனிந்து கொண்டதைக் கங்காதரன் கண்டு கொண்டிருந்தான். தன் எண்ணத்தை அறிந்ததும் அவள் என்ன சொல்வாளோ என்று இதுவரை சங்கடப்பட்டுச் சந்தேகத்தில் ஆழ்ந்திருந்த கங்காதரனுக்கு, அவளுடைய முகத்தில் ஒருகணம் கொடிவிட்டுப் படர்ந்த நாணம் ஒரு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியது. நாளை எப்படியும் சித்திராவுடன் மனந்திறந்து பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்ட கங்காதரனுடைய மனதில் தோற்றிய அந்தச் சிறு நம்பிக்கை மெல்ல வளாந்து அவன் நெஞ்சு முழுவதுமே வியாபித்துக் கொண்டது. 
 
 
30.
 
அடுத்த நாள்! பொங்கலன்று மாலையில் சித்திராவைத் தவிர வீட்டிலுள்ள அனைவரும் வற்றாப்பளை அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தனர். சித்திரா தான் வரவில்லையெனக் கூறி அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டிலே இருந்து கொண்டாள்.
குமாரபுரத்துக்குக் கிழக்கே வயல் வெளிகளுக்கு அப்பால் பெரியதொரு தங்கத் தாம்பாளம் போன்று மேலே கிளம்பி வந்த வைகாசி விசாகத்துப் பூரணச் சந்திரன் நிலவைப் பாலாய்ப் பொழிந்து கொண்டிருந்தது.
முற்றத்து வெண்மணலிலே சாய்ந்திருந்த சித்திரா அந்த நிலவையே பார்த்திருந்தாள்.
கோவிலடிக்குச் சென்றிருந்த கங்காதரன், விஜயா மூலமாகச் சித்திரா பொங்கலுக்கு வரவில்லையென்று அறிந்தபோது பரபரக்கும் உள்ளத்துடன் அவளைத் தேடி வந்தான். மணலிலே படுத்திருந்து நிலவையே வெறித்து நோக்கிய வண்ணம் இருந்த அவளுக்கு, கங்காதரன் வந்து, சில நிமிடங்களாகவே, தன் பின்னால் நின்றிருந்தது தெரியவில்லை.
நிலவின் சீதள ஒளியிலே சிலையோலச் சாய்ந்திருந்த சித்திராவைக் கண்ட கங்காதரனுக்கு, புன்னை மரத்தடியின் மயங்கிய ஒளியிலே தன்னசை; சந்தித்து மகிழ்ந்திருந்த அந்தச் சித்திராவின் ஞாபகம் ஓடி வந்தது. நிலவூறித் ததும்பும் அந்த விழிகள்! காதோடு அவள் கிசுகிசுத்துப் பேசுகையில் ஏற்படும் குறுகுறுப்பு! கன்னத்தோடு கன்னம் வைத்து இழைகையில் மனதைச் சிலிர்க்க வைக்கும் அந்த இளமை மணம்! மெத்தென்ற இதழ்களின் ஈரங்கலந்த இனிமை! ... இரண்டு வருடங்களாக அவன் மறந்திருக்க முயன்ற அந்த அற்புத அனுபவங்கள் அவனுடைய நெஞ்சை நிறைத்தன.
இரவின் தனிமையிலே தன்னை மறந்து படுத்திருந்த சித்திராவின் அங்கங்களிலே நிலவு விளையாடிக் கொண்டிருந்தது.
கங்காதரன் இதுவரை காலமும் காத்து வந்த விரதத்தின் தீவிரம் காரணமாக அவனுள் இறுகிப் போயிருந்த இளமை உணர்வுகள் உருகிக் கொண்டிருந்தன. அன்று, ஒளிப்பதற்கு என்னிடம் ஒன்றுமேயில்லை! மிஸ்டர்!, என்று வீனஸ் தேவதையின் கட்டழகுகளைக் காட்டி அவனையழைத்த கரோலினில் காணாத கவர்ச்சியை இன்று சேலை நிழலிலே தெரிந்தும் தெரியாமலும் போக்குக் காட்டிய அழகுகளுடன் கிடந்த சித்திராவைக் கணடு கிறங்கினான் அவன். 
'சித்திரா!" என்று மெல்ல அழைத்துக் கொண்டே போய் அவளருகில் அவன் அமர்ந்தபோது திடுக்கிட்டு எழுந்த சித்திரா அவனைக் கண்ட திகைப்பு நீங்கி, 'ஏனத்தான் நீங்கள் பொங்கலுக்குப் போகேல்லையோ?" எனக் கேட்டாள். 'நான் அங்கை போனன் ... நீயில்லை .. பின்னை இஞ்சை வந்திட்டன்..." அவனுடைய கரல் கனத்திருந்தது.
அவனுடைய விழிகளில் வழிந்தோடிய உணர்ச்சிகளையும், குரலில் காணப்பட்ட வேறுபாட்டையும் இனங்கண்டு கொண்ட சித்திரா தலைகுனிந்து மௌனமாய்ப் போனாள்.
நெஞ்சு துடிக்க, நாடி நாளங்களில் இள இரத்தம் புடைக்க, உடல் தகிக்க, மெல்ல அவளுடைய கரத்தைப் பற்றிய கங்காதரனுடைய விரல்கள் நடுங்கின. அவனுடைய சூடான கை அவளுடைய கரத்தை இறுகப் பற்றியபோது சித்திராவின் உடல் நடுங்கியது.
சற்றுநேரம் அவளுடைய கையைப் பிடித்தவாறே அமர்ந்திருந்த கங்காதரன், 'சித்திரா! என்னைக் கலியாணம் முடிக்கிறதுக்கு உனக்கு விருப்பந்தானே?" என உணர்ச்சி ததும்பக் கேட்டபோது நிமிர்ந்து அவனுடைய முகத்திலே தன் பார்வையைப் பதித்த சித்திரா மீண்டும் தலைகுனிந்து, ஆம் என்னும் பாவனையில் தலையை அசைத்தாள்.
தன்னை மறந்த கங்காதரன் சட்டென்று அவளை இழுத்துத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு, 'சித்திரா! சித்திரா!" என மயங்கிப் பிதற்றியபோது, அவனுடைய உடல் நெருப்பாகக் கொதித்தது. இவ்வளவு காலமும் அவனுள் அடங்கிக் கிடந்த அந்த நெருப்பு இப்போ வேளை வந்தபோது சுவாலித்து எழுந்தது.
ஆவேசங் கொண்டவன்போல் அவளைத் தன்னுடன் இறுகத் தழுவிக் கொண்ட அவனுடைய வெப்பமான மூச்சு அவளுடைய கழுத்தோரங்களில் படர்ந்தது. விழிகள் மூடிக்கிடந்த அந்த முழு நிலவு போன்ற முகத்தை மெல்ல நிமிர்த்திக் தன் இரு கைகளிலும் ஏந்திக் கொண்டு வெறிகொண்டவன் போல அவளுடைய நெற்றி, கண்கள், கன்னக் கதுப்புக்கள் எல்லாவற்றிலும் எல்hவற்றிலும் தன் இதழ்களை உலவ விட்டவன் அவளுடைய சிவந்த இதழ்களை மெல்ல ஸ்பரிசித்தான்.
அக்கினிக் குழம்பாய்த் தகித்த அவனுடைய உடலின் மூர்க்கமான அணைப்பிலே கட்டண்டு கிடந்த சித்திரா அனலில் பட்ட மெழுகுபோல உருகிப் போய்விடவில்லை.
 à®…வள் பனிக்கட்டியாயச் சில்லிட்டுப் போயிருந்தாள்! வெப்பமான அவனுடைய உதடுகள் அவளுடைய இதழ்களைச் சந்தித்தபோது அவை குளிர்ந்துபோய் ஜீவனற்றுக் கிடந்தன. அவனுடைய இழுப்புக்கெல்லாம் இசைந்து கொடுத்த அவளுடைய உடல் உணர்ச்சியற்று மரக்கட்டையாய்க் கிடந்தது.
சில நிமிடங்கள் தன்னை மறந்து துடித்திருந்த கங்காதரன் அவள் சில்லிட்டு நிற்கும் தன்மையை உணர்ந்து வேகம் தணிந்துபோய், அவளுடைய முகத்தை நிமிர்த்தி, 'சித்திரா! உனக்கு என்னிலை விருப்பமில்லையோ!" எனக் கேட்டபோது விழிகளைத் திறந்து அவனை வெறித்து நோக்கிய சித்திரா, அதே கேள்வியைத் திருப்பித் தன்னிடமே கேட்டுக் கொண்டாள். என்னுள் அகலிகைக் கல்லாகக் கிடந்து பின் விழித்துக் கொண்ட அந்த உணர்வுகள் இப்போ ஏன் தூங்கிவிட்டன? நான் இவரை மணமுடிக்க வேண்டும் என நினைத்து அணைத்தபோதுங்கூட ஏன் என்னுள் அந்த உணர்வுகள் மலரவில்லை?
சித்திரா செயலிழந்து போய்க் கல்லாக நின்றாள்.
அவளுடைய நிலையை உணர்ந்த கங்காதரன், அவளைத் தன் அணைப்பினின்றும் மெல்ல விட்டு, 'ஏன் சித்திரா, உனக்கு ஏதும் சுகமில்லையோ?" எனக் கேட்டபோதும் அவள் பதில் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தாள். அவளுடைய சிந்தனையில் குமாருவின் நினைவுகளம் அத்தானைப் பற்றிய எண்ணங்களும் சூறாவளியாகச் சுழன்றன.
... துளிர்விட்டுத் தழைத்து மொட்டுக் கட்டி நின்றபோதும் ஏன் என்னால் இயல்பாகவே மலரமுடியவில்லை? ...
சித்திரா நிமிர்ந்து முழுநிலவை நோக்கினாள்.... அங்கே குமாரு சிரித்தான் ... கேலியா? .. குறும்பா? .... பரிதாபமா? ...
அவளுள் மின்னலடித்தது போல ஒரு பிரமை!
... உனக்கென்று ஒருமுறை மலர்ந்த என்னால், இவருக்கென்று மீண்டும் மலர முடியவில்லையே ஐயா! ... உன்னை மறந்து என்னால் வாழ முடியவில்லையே ஐயா! ..
சித்திரா தன் கைகளுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு, விம்மி விம்மியழ ஆரம்பித்தாள். உணர்ச்சிகள் அணைந்துபோன நிலையிலிருந்த கங்காதரன் அவளைத் தொட்டுத் தேற்ற முயன்றபோது, தன்னை விடுவித்துக் கொண்ட சித்திரா, 'இப்ப என்னை ஒண்டும் கேக்காதையுங்கோ! .... போட்டு நாளைக்கு வாருங்கோ!" என அழுகையினூடே கூறியபோது, அவளுடைய வேண்டுதலுக்கு மதிப்புக் கொடுத்து அங்கிருந்து மிகவும் குழம்பிய மனதுடன் புறப்பட்டுச் சென்றான் கங்காதரன். 
வெகுநேரமாக அழுது கொண்டிருந்த சித்திரா, அமைதி அடைந்தபோது, அவள் விஜயாவையிட்டுச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். ஆசைகளைத் தேக்கி வைத்துக் கொண்டு நிற்கும் அத்தானுக்கு ஏற்றவள், புத்தம் புது மொட்டான விஜயாவே! என எண்ணிக்கொண்ட அவள், எழுந்து நிலவிலே குமாருவின் சிதையை நோக்கி நடந்தாள்.
அந்தப் புனித பூமியில் போய் நின்றபோது, அவளுடைய நினைவுகள் ஒலமிட்டன.
... தன் கணவனுடைய திறமையிலே அசையாத நம்பிக்கை கொண்டு, வேலப்பணிக்கனுடைய மனைவி வந்திருக்கிறன்! காலை நீட்டு! என்று கூறி யானையை அடக்கிய அரியாத்தை பிறந்த மண்ணிலா நான் பிறந்தேன்? தன் கணவனுடைய தன்மானத்தைத் தன் புகழ் பாதிக்குமே என்று தன்னுயிரை நீத்து, இன்றுவரை அந்தக் கதை வழங்கச் செய்த அரியாத்தை உயிரைவிட்ட அந்தப் பூமியிலா நான் வாழ்ந்தேன்?
.. எனக்கென்று நீ வாழ்ந்துவிட்டுப் போனபின் ... உனக்கென்று வாழாமல், என் உணர்வுகளுக்கென்று வாழ நினைத்த நான், உனக்கு எவ்வளவு அவமானத்தைத் தேடித்தர இருந்தேனே ஐயா! ... நான் உன்னிடமே வந்துவிடுகிறேன் ஐயா! ....
சித்திரா சிதையை நெருங்கிச் சென்று அதனருகிலே கருகிப் பட்டுப்போய் நின்ற மரத்தின் கணுவில் அண்மையில் துளிர்த்திருந்த அந்த செந்தளிர்க் கொத்தை மெல்ல உடைத்துச் சிதையிலே எறிந்தாள்.
பின்பு, தான் உடுத்தியிருந்த சேலையைக் களைந்து இரண்டாகக் கிழித்து ஒரு பாதியால் தன்னுடலை மறைத்துக் கொண்டு, மறுபாதியைக் கயிறுபோல முறுக்கி எடுத்துக்கொண்டு, சிதையருகிலே நின்ற ஒரு மரத்தின் கிளையைப் பற்றி ஏறினாள் சித்திரா.
மெல்லிய தென்றல் வீச, சுற்றி நின்ற மரங்களின் உதிர, வைகாசி விசாகத்துப் பூரண நிலவு மௌனமாய் அழுதது.
 
முற்றும்.

     இதுவரை:  24873322 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3275 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com