அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 7 arrow புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சுமத்திரி பிரான்சிஸ்  
Monday, 05 July 2004
பக்கம் 1 of 2

தமிழ் பேசும் நல்லுலகம் என்பதானது இன்று விரிந்து எல்லைகள் அற்றதொன்றாகிவிட்டது. அனைத்துலக அளவில் பேசும் மொழியாகியும் நிற்கின்றது தமிழ். இதேவேளையில் அழிந்துபடும் மொழிகளில் தமிழும் ஒன்றென யுனெஸ்கோ நிறுவனம் பட்டியலிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இலக்கிய இலக்கணச் செழுமையும், பழமையும் கொண்டதான இத்தமிழ் மொழி, புலம்பெயர்ந்து தம் வாழ்வை உறுதிப்படுத்திவிட்ட நம் தலைமுறையினருக்கு அவசியம்தானா? அவர்கள் அம்மொழியைத் தொடர்ந்தும் பேணுவார்களா? என்ற கேள்விகள் இன்று உரத்து எழுப்பப்படுகின்றன. இங்கு மொழி எனப்படுவது பரிமாற்றத்திற்கு உரியது என்ற நிலைமாறி அடையாளத்தை அல்லது பண்பாட்டைக் காவி நிற்கின்றது என்பதனையும் நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும். அத்துடன் இலங்கைத் தமிழராகிய எமக்கு நமது அரசியலையும் அது சார்ந்து நிற்கின்றது என்பதும் மேலதிகச் சுமையாகும்.

ஐரோப்பாவைப் பொதுவாகவும் பிரான்சைக் குறிப்பாகவும் கொண்டு புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி என்னும் இந்தத் தலைப்பு கவனத்தில் கொள்ளப்படுகின்றது. தமது மொழியான தமிழைக் குழந்தைகளுக்குப் புகட்டவேண்டும், அதன்வழியான அடையாளத்தை, பண்பாட்டைப் பேணவேண்டும் என்ற ஆர்வம் அநேகமான பெற்றோர்களுக்கு இருக்கின்றது. அதற்கேற்ப அவர்கள் தமிழ்ப் பாடசாலைகளுக்குத் தமது குழந்தைகளை அனுப்பியோ அல்லது வீடுகளில் தாமே தமிழ் மொழியைப் பயிற்றுவித்தோ வருகிறார்கள். ஆனால் இதற்கு நேர் எதிர்மாறாக, பெற்றோர்களில் இன்னொரு சாரார் எமது மொழியைத் தமது குழந்தைகளுக்குப் போதிப்பதில் சிறிதும் ஆர்வமற்று அதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமலும் இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் நியாயங்களில் முதலாவது,  இந்த நாட்டாரோடு இணைந்து வாழ்வதற்குத் தமிழ் இடைஞ்சலாக இருக்கும் என்பதும் இரண்டாவது, இங்கு பாடசாலை செல்லத் தொடங்கும் ஒரு குழந்தைக்குத் தமிழ்மொழிப் புழக்கம் இடையூறாக அமைந்துவிடும் என்பதும் ஆகும். இப்படிப்பட்ட இருவகைப் பெற்றோர்களுக்கு மத்தியில்தான் நம் இளந் தலைமுறையினர் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தலைமுறையினர் தமிழைக் கற்பதில் தம்மளவில் உற்சாகமாக உள்ளார்களா என்பது வேறுவிடயம். இவ்விருவகைப்  பெற்ரோரினது நியாங்களில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. ஆயினும் புலம்பெயர்ந்து வாழும் நாம் மனங்கொள்வதற்குச் சில விடயங்கள் உள்ளன, என்பதையும் மறத்தலாகாது.

புலம்பெயர்ந்த நாட்டில் ஒரு சமூகம் தன்னுடைய மொழியை, பண்பாட்டை, அடையாளத்தைப் பேணுதல் அல்லது பேணாது விடுதல் அச்சமூகத் தரப்பு எண்ணத்தை மட்டும் சார்ந்தல்ல. மாறாக வாழ நேர்ந்துவிட்ட நாட்டினதும் சமூகத்தினதும் எண்ணத்தையும் நடவடிக்கையையும் சார்ந்ததாகும். இவ்வகை நாடுகளில் இலங்கைத் தமிழராகிய நாம்மட்டும் முதலில் புலம்பெயர்ந்து வந்து சேர்ந்தவர்கள் அல்லர். எமக்கு முன்னே அதிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே பல்வேறு தேசியங்கள் புலம்பெயர்ந்து வாழும் முன்னுதாரணங்கள் இங்குண்டு. எந்த மனிதரும் வாழ்ந்து களைத்துப்போகும் வேளையில் தம் வேருக்குத் திரும்பும் அல்லது தம் வேரைத் தேடும் நிகழ்வுகள் மனித இயல்பாகவே காணப்படுகின்றன. இது எம் தலைமுறையினருக்கும் விதிவிலக்கானதல்ல. இவ்வகையான தேடல் ஒன்று தோன்றும் வேளையில் தம்வேர் ஊன்றி நிற்கும் மொழியை அறிமுகப்படுத்தாதற்காக தங்களது முன்னோராகிய எம்மை சபிக்கக்கூடும். ஆகவேதான் தமிழ்மொழியைக் கற்பித்தல், அறிமுகம் செய்தல் பற்றியெல்லாம் நாம் கவனம் கொள்ள வேண்டி இருக்கின்றது.

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தமிழ் கற்பித்தலில் உன்னதம் என்னும் சிறு நூலில் தெரிவித்துள்ள கருத்துக்ககளின் ஒன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும். "மொழி பண்பாட்டு தொடர்ச்சியில் வகிக்கும் இடத்தை அறிந்து கொள்வது அவசியமாகும். லெவிஸ்ராஸ் என்னும் புகழ்பெற்ற மானிடவியலறிஞர் மொழியினை:
1. பண்பாட்டின் பெறுபேறு என்றும்
2. பண்பாட்டின் ஓர் அங்கம் என்றும்
3. பண்பாடு உருவாக்கத்திற்கான ஒரு நிபந்தனை என்றும்
கூறுவர். இக்கண்ணோட்டத்தில் நோக்கும்போது தமிழ்ப்பயில்வு என்பது பண்பாட்டு தொடர்ச்சிக்கான ஓர் அத்தியாவசிய தேவை என்பது புலனாகும். அதுவும் பல்பண்பாட்டு சூழலில் வளரும் குழந்தைகள்-சிறாருக்கு இக்கல்வி மிகமிக அவசியமாகின்றது" என்கிறார்.

பொதுவாகவே தமிழ் மொழியைப் பயிற்றுவித்தல் இளக்காரமான தொன்றாகவே தமிழ்ச்சமூக எண்ணப்படிமமாக இருக்கின்றது. அதிலும் சிறுவர்களுக்கு மொழி கற்பித்தல் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அனா ஆவன்னாவை சொல்லிக் கொடுக்க எந்தப் பயிற்சியும் முயற்சியும் தேவையில்லை என்பதே பொதுக்கருத்தாக உள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் கற்பித்தல் என்பது இன்னமும் மலினப்பட்டதொன்றகவே கருதப்படுகின்றது. அவ்வகையில் தமிழைத் தம் குழந்தைகள் கற்பதில் ஆர்வம் காட்டும் சமூகம், தமிழைப் பயிற்றுவித்தல் பற்றிய நெறிமுறைகளை வகுத்துக் கொள்வதில் அதிகளவு ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழை முறைசார் கல்வியாகக் கொண்டிருக்கும் தாயகத்தில் கூட தமிழ் கற்பித்தல் பற்றிய சீர்திருத்தச் சிந்தனைகள் பல முன்வைக்கப்படுகின்றன. ஆனால் முறைசாராக் கல்வியாக வாரத்தில் நான்கு மணிநேரம் அல்லது அதற்குச் சற்று அதிகமாக மட்டுமே கற்பிக்க வேண்டிய சூழல் உள்ள புலம்பெயர் தேயத்தில் இன்னும் அதிக அக்கறை செலுத்த வேண்டுமல்லவா?

முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் தான் எமது பிள்ளைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாடசாலையில் பிரெஞ்சுமொழியைக் கற்கிறார்கள். ஆசிரியர்கள், நண்பர்களுடன் அதே மொழியிலேயே கருத்துப் பரிமாற்றம் செய்கிறார்கள். வீட்டிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் யாவற்றையும் பிரெஞ்சு மொழிக்கூடாகவே அவதானிக்கிறார்கள். கணிணியில் தமது கல்விமொழியிலேயே காரியமாற்றுகிறார்கள். இவற்றுக்கும் அப்பால் அந்தக் குழந்தை பெற்றோருடன் உரையாடுகின்ற நேரம் மிகக் குறுகியது. விடுமுறை தினங்களில் சில குழந்தைகள் தமிழ்ப் பாடசாலைகளுக்குச் செல்கின்றபோதிலும் அங்கு தமிழ்மொழி  போதிக்கப்படும் நேரமோ மிகமிகக் குறுகியது. இத்தகைய சிக்கல்களுக்குள் சிக்கித் தவிக்கும் எம் சிறார்களுக்கு நாம் எப்படித் தமிழ்மொழியைப் போதிக்கப் போகிறோம்? மிகமிகச் சிக்கலான ஒரு விடயம்தான் இது. ஆறுதலாகவும் பொறுமையாகவும் அவதானமாவும் சில விடயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மொழியைப் பயிற்றுவிக்கும் தொடக்க நிலையே இன்று சிக்கலுக்குரியதாகக் காணப்படுகின்றது.

"தமிழைப் பொறுத்தவரை குழந்தை எங்கும் பேச்சு மொழியையே கேட்கிறது. திடீரென்று இலக்கிய மொழிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. நூலிலே தவிர குழந்தை இலக்கிய மொழியை வேறெங்கு காணவோ கேட்கவோ முடியும்? இலக்கிய மொழி பயிலும் வகுப்பிலே கூட ஆசிரியர் பெரும்பாலும் பேச்சு மொழி மூலமல்லவா புத்தகத் தமிழை பயிற்றுகிறார்?" என்னும் ஈழத்து மொழியியல் அறிஞர் பேராசிரியர் சுசீந்திரராசா அவர்கள் எழுப்பும் கேள்வியின் நியாயம் புரியப்படக் கூடியதே.

எமது மொழியில் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்குமிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. எனவே முதலில் பேச்சுமொழிக்கூடாகத் தான் நாம் எமது மொழியைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தல் பொருத்தமானது. அத்துடன் குழந்தைகள் வீட்டில் பெற்றோருடன் பேச்சுமொழியிலேயே உரையாடுகிறார்கள். அதற்கேற்ப சிறியசிறிய பாடல்களை, குட்டிக் கதைகளை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தோமேயானால் நல்ல பயன் கிடைக்கும்.. அவர்கள் இதில் மிகவும் ஆர்வமாகவும் இருப்பார்கள். எதை எப்படிச் சொன்னாலும் அதை அப்படியே உள்வாங்குகின்ற தன்மை குழந்தைகளுக்கு உண்டு. இதைப் பயன்படுத்தித் தமிழ்மொழியை மெல்லமெல்ல அவர்களுக்குப் புரியவைப்பதைப் பெற்றோர்கள் தமது முக்கிய பொறுப்புக்களில் ஒன்றாகக் கருதுவது நல்லது.

இதற்கெல்லாம் கால அவகாசம் போதாது என்று பெற்றோர் தட்டிக்கழிப்பது நல்லதல்ல. குழந்தைகள் நலனில் அக்கறை இருந்தால் இவையெல்லாம் பெரிய சுமையாகத் தெரியாது. பேச்சுமொழியை நன்கு தெரிந்த கொண்டபின் எழுத்துமொழியை அவர்களுக்குப் புரியவைப்பதில் அதிக சிரமமிருக்காது. "நான் இண்டைக்குப் பாடசாலைக்குப் போனனான்" என்று பேச்சுமொழியில் உள்ள வாக்கியத்தின் எழுத்துவடிவத்தை அறிமுகப்படுத்தம்போது குழந்தைக்கு நன்கு விளங்கும்படி புரியவைப்பது தான் மிகமுக்கியமானது. தொடக்கத்தில் குழந்தை சிறிது சிரமப்பட்டாலும் காலப்போக்கில் அது அவர்களுக்குப் பரிச்சயமாகிவிடும். குழந்தை வளரவளர ஏனைய மொழிகளோடு உறவாடத் தொடங்க எல்லாச் சிக்கல்களும் அவிழ்க்கப்பட்டுவிடும்.பிரெஞ்சுப் பாடசாலைகளுக்கு எமது குழந்தைகள் மூன்று வயது தொடக்கம் போய் வருகிறார்கள். அங்கே ஆரம்பத்தில் அவர்களுக்கு மொழியைப் போதிக்கவே மாட்டார்கள். சிறிய பாடல்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். குழந்தைகளின் விருப்பம் போல படங்கள் வரையும்படி சொல்வார்கள். பின்னர் மெதுமெதுவாக எழுத்துப் பயிற்சி முறைக்கான ஆரம்பநிலைகளாக வட்டம் வரைதல், நீள் கோடிடுதல், குறுக்குக் கோடிடுதல், சரிவாகக் கோடிடுதல் என அவர்களைப் பயிற்றுவிப்பார்கள். அதன் பின்னர், அதாவது இரண்டு ஆண்டுகளின் பின்னர்தான் எழுத்துக்களை அறிமுகப்படுத்துவார்கள். முதலில் குழந்தையின் பெயரை எழுதப் பழக்குவார்கள். தன்னுடைய பெயரிலுள்ள ஐந்தாறு எழுத்துக்களை அந்தக் குழந்தை தெரிந்து கொள்கிறது. இதுபோன்ற இன்னும் பலபல இலகுவான முறைகளைப் பயன்படுத்தித்தான் குழந்தைகளுக்கு எழுத்துக்களை அறிமுகப்படுத்துகிறார்கள். ஓராண்டிற்குள் அந்தக் குழந்தை பிரெஞ்சு மொழியிலுள்ள சிறிய நூல்களை வாசிக்கத் தொடங்குகிறது. பாடசாலைக்குச் செல்வதற்கு முன் பிரெஞ்சுமொழியைப் பேச்சுமொழியாகவோ அல்லது எழுத்துமொழியாகவோ அறிந்திருக்காத ஒரு குழந்தை மிகக் குறுகிய காலத்திற்குள் வளர்ச்சி அடைகிறதென்றால், அதற்குக் காரணம் அவர்களது கல்விமுறைமை தான் என்பது தெளிவாகிறது.



மேலும் சில...
பெண் என்றாலே நிர்வாணம்தான் - ஆணாதிக்க ஓவியமொழி குறித்து
விலங்குப் பண்ணை
யாழ்ப்பாணப் பண்பாட்டின் தெரியப்படாத பக்கங்கள்
காணாமல் போனவை

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 19 Apr 2024 08:28
TamilNet
HASH(0x55c6914ec7e8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 19 Apr 2024 08:36


புதினம்
Fri, 19 Apr 2024 08:36
















     இதுவரை:  24782359 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5871 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com