அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இரண்டு கவிதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தீபச்செல்வன்  
Wednesday, 12 March 2008

பயங்கரவாதிகளும் பதுங்குகுழிகளும்

01.
காலாவதியான ஒரு
கொக்கக்கோலாவை சுற்றி
எறும்புகள் சூழ்ந்திருந்தன.

எனது வஸ்திரங்கள் கரைய
அதிகாரத்தின் முன்
நிர்வாணமாய் நின்றிருந்தேன்
அது என்னை அடிமையாக்கி
பயங்கரவாதி என அழைத்தது.

புரட்சி ஒன்றின் விளிம்பில்
அடிமை பீடிக்கிறதை
நான் உணர்ந்தேன்
கூச்சலிட்டு சொல்லி உதறுகிறேன்.

சனங்கள் நிறைந்த
எனது கிராமத்தின் மேலாக
வேக விமானம் ஒன்றை
உக்கிரேன் விமானி ஓட்டுகிறான்.

பயங்கரவாதிகளுக்குள்
பதுங்குகுழிகள் பதுங்குகின்றன.

குழந்தைகள்
தாய்மார்கள்
முதியவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள்
என ஜநா அறிவித்தது.

நான் பயங்கரவாதி என்பதை
உரத்து சொல்கிறேன்.

என்னை அமெரிக்காவின் நேர்மை
தேடிவருகிறது
ஜநா படைகளும்
அமெரிக்காப் படைகளும்
இந்தியப் படைகளும்
இலங்கைப்படைகளைப்போல
எனது தெருவுக்கு வர
ஆசைப்படுகிறார்கள்.

நான் அப்பிள் பழங்களை
புசிப்பதற்கு ஆசைப்பட்டிருக்கிறேன்.
கிரேப்ஸ் பழங்களை
உற்பத்தி செய்யத்தொடகினேன்.

நான் ஒலிவம் இலைகளை
மறந்திருந்தேன்
பேரீட்சை பழங்களை
உண்ணாதிருந்தேன்
எனது பனம்பழங்களை
இழக்க நேர்ந்தது.

ஒட்டகங்களின் முதுகில்
குவிந்திருந்த பொதிகள்
சிதைந்ததை நான் மறந்தேன்
எனது மாட்டு வண்டிகள்
உடைந்து போயின.

தலைவர்களின் இடைகளில்
எண்ணைக்குடங்கள் நிரம்பியிருந்தன
அவர்களின் கூடைகளில்
எனது பனம்பழங்கள்
நிறைக்கப்பட்டிருந்தன.

கனியின் விதை கரைய
என்மீது கம்பிகள் படர்ந்தன.

 

02.

திருவையாற்றில் குருதி
பெருக்கெடுத்து ஓடுகிறது
பிணங்களை அள்ளிச் செல்கிறது
வெங்காயத்தின் குடில்கள்
கருகிக்கிடந்தன
தோட்டம் சிதறடிக்கப்பட்ட
செய்தியை அமெரிக்கா வாசிக்கிறது.

இரணைமடுவில் பறவைகளின்
குளிர்ந்த சிறகுகள் உதிர்ந்தன
தும்பிகளும் நுளம்புகளும்
எழும்ப அஞ்சின
இரணைமடுக்குளத்தில்
குருதி நிரம்ப பிணங்கள் சேர்ந்தன
நோர்வேயின் படகு மிதக்கிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும்
ஆயுதங்கள் பெருக
எனது ஊரின் நடுவில்
போரிட்டுக்கொண்டிருக்கிறது.

உலைப்பானைகளும்
அடுப்புகளும் சிதைய
எனது மனைவி நசிந்து கிடந்தாள்.

எனது வீதியை ஜப்பான்
சுருட்டி எடுத்தது
அமெரிக்காவும் ஜநாவும்
எனது குழந்தையை
பள்ளியோடு கொன்று விட்டது
பிரித்தானியாவின்
சிறையில் நானிருந்தேன்.

ஒரு மாம்பழத்தை தின்பதற்கு
எல்லோரும் அடிபட்டு
எனது காணியை சிதைத்தார்கள்
கத்திகளை இன்னும்
கூர்மையாக்கி வருகிறார்கள்.

இந்தியாவும் அமெரிக்காவும்
எனது தலையில்
காலுன்ற அடிபடுகிறது
சீனாவும் ரசியாவும்
எனதூர் ஆலயத்தின்
கூரைகளை பிரித்துப்போட்டது.

நான் முதலில் அமெரிக்காவிற்கு
பதில் சொல்ல வேண்டும்

கோதுமைகளுடன்
அமெரிக்காவின் கப்பல்
திருமலைக்கு வருகிறது
அமெரிக்கா எனது படத்தை
குறித்திருந்தது
ஜநா எனது குழந்தையின் படத்தை
குறித்திருந்தது.

எல்லாவற்றக்காகவும்
வலிந்து விழுங்கிய
அதிகாரங்களால்
நான் பயங்கரவாதி எனப்பட்டேன்
ஒடுக்கப்பட்டவர்களின் கூட்டத்தில்
நான் தூக்கி எறியப்பட்டேன்.

நமது ஓலங்களிற்குள்
பெருகும் குருதி ஆறுகளிற்குள்
சந்தை பரவி நிகழ்ந்தது.

அமெரிக்கா இரணைமடுவுக்கு
ஆசைப்படுகிறது.

 

இந்த நாகரிகத்தின் வேர் படுகிறது


 

01.
எங்களில் யாருக்கும்
இங்கு வாழ்க்கையில்லை
படையெடுத்து வந்தவர்களின்
வாழ்வுக்குள் நசியக்கூடிய
சிறிய வாழ்க்கை ஒன்றை
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம்.

இனி யாருடைய ஆதிகளும்
இங்கிருப்பதாய்
மார்பு நிமித்த முடியாது
இப்பொழுது
நிமிர்ந்த மார்புகள்தான்
சரிக்கப்பட்டிருக்கின்றன
இந்தக்குறியில்
எப்படி நாங்கள்
நமது மார்புகளை
நிமித்தப்போகிறோம்?

நாம் எல்லோரும்
குனிந்து கொண்டுதானே
போகிறோம்.

02.
எங்கள் நாகரிக்தின்
வேர் படுகிறது
இந்த நகரத்தை விட்டு
ஒவ்வொருவராக
வெளியேறி வருகிறார்கள்
இது கைவிடப்பட்ட
நகரமாகிறது
துண்டிக்கப்பட்ட
தனிமையிலிருக்கிறது.

ஆதியை துறந்தவர்களாய்
வெளுறிய வீதிகளிலிருந்து
கால்களைத் தூக்கி
படகுகளில் நிரப்பி
மடக்கிக்கொள்கிறார்கள்.

இந்த நகரத்தை
யாருக்காக விட்டுச்செல்கிறோம்?
இங்கு யாருடைய வாழ்வு
சாத்தியப்பட்டடிருக்கிறது?

03.
நாங்கள் ஒரு சங்கில்லியன் சிலை
வளர்த்திருக்கிறோம்
இப்பொழுது
சங்கிலியனின் சிலையை
எங்களால் நிமிர்ந்து
பார்க்க முடியாதிருக்கிறது
அது சிதைக்கப்பட்டிருக்கலாம் என்ற
ஜயத்துடன்
கண்களை வேலியின் கீழாக
சொருகிப்போகிறோம்
எங்கள் முன்னவர்களின்
நடுகல்கள்,நினைவுத்தூபிகள்
சில இரவுகளில்
அகழ்ந்து மண்ணாய் கிடக்கிறது
எங்களின் மம்மிகள்
இல்லை என்றாகின்றன.

இனி இந்த சுவர்களுக்ககு
வண்ணம் பூசவியலாது
அதில் பாசி படர்ந்திருக்கிறது
எங்கள் வாசகங்கள்
மறைக்கப்பட்டுவிட்டன.
எங்கள் சுவர்களின் ஆணிகள்
துருப்பிடித்து உக்கிவிட்டன.

எங்கள் நாகரிகத்தின் சுவடுகளை
சுவர்களில்
தொங்கவிடமுடியாது.

சிறைச்சாலை வண்ணம் பூசப்பட்டிருக்கிறது
அரச சிறைச்சாலை
அடைக்கலம் புகுவதற்கும்
அகதிகளாக்குவதற்கும்
தரப்பட்டிருக்கிறது
நாங்கள் நடமாட முடியாது
உயிரைப்பொத்தி வைத்திருக்கலாம்
கால்களில்
கட்டுப்போடப்பட்டிருக்கும்.

04.
துப்பாக்கிகளால்
தவரவிடப்பட்டவர்களாயிருந்தாலும்
எதுவரை வாழப்போகிறோம்
எப்படி இங்கு ஒரு சந்ததி
உருவாகப்போகிறது?
நீ சந்ததியை உருவாக்க
திறனற்றவனாக்கி
விடுவிக்கப்பட்டிருக்கிறாய்
இவளின் கருவிலிருக்கும்
குழந்தையின் ஆயுள்
எவ்வளவு நீளமானது?
குழந்தையைவிட
இவளின் கருவில்
என்ன நிறைந்திருக்கிறது?

நீ குழந்தைகளுக்காக
சுவர்களில் வரைந்நிருந்த
உனது நாகரிகத்தின்
வீரதீர காட்சிகள் அழிந்துவிடட்ன
மீண்டும் அதை உன்னால்
வரைய இயலுமா?
நமது நாகரிகத்தின்
நிறங்கள் உதிர்கையில்
உருவப்படுகையில்
வெளுறிய பிள்ளைகள்
காலம் பிசகிய
பள்ளிக்கு போகிறார்கள்.

05.
நிறைய வீடுகள்
பூட்டடப்பட்டிருக்கின்றன
பாழடைந்து விட்டன
நிறையவீதிகள் சருகுகளால்
நிரம்பி உள்ளன
ஒன்றில் அவர்கள்
வெளியேறியிருப்பார்கள்
அல்லது
கொலைசெய்யப்பட்டிருப்பார்கள்
சில வீடுகள்
சோபையிழந்து புகைகின்றன
அங்கு அவர்கள்

ஊமைகளாக்கப்பட்டிருக்கலாம்
குருடர்களாக்கப்பட்டிருக்கலாம்.

இங்கு யாருடை விழிகள்
திறந்திருக்கின்றன?
இங்கு யாருடைய வாய்கள்
பேசுகின்றன?
இங்கு யாருடைய நடமாட்டங்கள்
நிகிழ்கின்றன?

எங்கள் வீதி என்ற
துணிச்சலுடன் போகிறோமா?
நாம் பிரதான வீதியில்
செல்ல அனுமதிக்கப்படுகிறோமா?
வைத்தியசாலைப்பயணத்ததிற்கு
ஒரு மூதாட்டி நெடு நேரமாய்
காத்திருக்கிறாள்
எல்லோரும் தடுக்கப்பட்டு
உள்வீதிகளில்
நிறுத்தப்பட்டிருக்கிறோம்
இவைகளில் நசுங்கி
சில பிள்ளைகள்
தாமதமாக பள்ளி போகிறார்கள்.

06.
நமது நாகரிகத்தின்
வேர் படுகிறது
நமது நாகரிகத்தின்
வாழ்வு அழிந்துவிட்டது
என்பதை வெட்கத்துடன்
ஒப்புக்கொள்வோமா?

இந்தக்குடா இப்பொழுது
எதற்கு விரிந்திருக்கிறது?

படையெடுத்தவர்கள்
நிறைந்திருக்கிறார்கள்
அவர்களுக்கு கையாள
பயங்கர ஆயுதங்கள்
நிறைந்திருக்கின்றன
அவர்கள் மரணத்தை
நிறைத்திருக்கிறார்கள்.

இதற்குள்ளளாகவே அந்த
வாழ்வு தரப்பட்டிருக்கிறது
நிறம் உருவப்பட்ட
வாழ்வை ஏற்க
நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்
அல்லது அரச படகு இருக்கிறது
கால்களை மடக்கி
அதில் ஏறிப்போகலாம்?

நமது வாழ்வில் வழியும்
வெட்கத்தை துடையுங்கள்
நாம் நமது மார்புகளை
எப்படி நிமித்த வேண்டும்?
இந் த நாகரிகத்தின் வேரை
எப்படி துளிர்க்கச் செய்யவேண்டும்?
நமது வர்ணங்கள் எங்கிருக்கின்றன?
நமதேயான வாழ்வை
மீட்டெடுக்க வேண்டும்..


     இதுவரை:  24681933 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1194 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com