அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 17 January 2025

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 7 arrow விலங்குப் பண்ணை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


விலங்குப் பண்ணை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: ஷோபா சக்தி  
Sunday, 11 July 2004

ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்திரெண்டாம் ஆண்டு நான் ஏழாவது வகுப்பில் பாசாகி எட்டாம் வகுப்புக்கு சென்றேன். சென்ற ஆண்டு இறுதிப் பரீட்சையில் சித்தியடையாத பழைய எட்டாவது வகுப்பு மாணவன் ஒருவன் இப்பொழுது எங்களுடன் மறுபடியும் எட்டாம் வகுப்பில் படிக்கத் தொடங்கினான். எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் அதிக தலைமுடியுடன் காணப்பட்டோம். இருவரும் சீத்தைத் துணியில் தைக்கப்பட்ட பூப்போட்ட சட்டைகளும் ஃப்ளுரில் துணியில் காற்சட்டைகளும் அணிந்திருந்தோம். இருவருமே வேதக்காரர்கள். அதாவது ABCD எனப் பிரிக்கப்படடிருந்த எட்டாவது வகுப்பில்  நான்கு பரிவுகளிலும் நாங்கள் இருவர் மட்டுமே வேதக்காரர்கள். எல்லாவற்றையும்விட எங்கள் இருவரது பெயர்களும் ஒன்றாகவிருந்தன. நான் à®œà¯†.அன்ரனி, அவன் à®®.அன்ரனி.

ம.அன்ரனியை நான் முன்பே பாடசாலை வளவுக்குள்ளும் தெருவிலும் சந்தித்திருந்த போதிலும் அவனுடன் பேசியதில்லை. அவன் ஒரு நெடு நெடுவென வளாந்தவன். ஆனால் மிகவும் ஒல்லியானவன். எப்போதுமே நோயாளி போலவே காணப்படுவான். அவன் இப்போது வகுப்பறையின் கடைசி வாங்கினை பகிர்ந்து கொண்டான். நான் படிப்பிலே மத்திமமான மாணவன் என்ற போதிலும் உயரம் அதிகமாகையால் கடைசி வாங்கிலைதான் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

வகுப்புகள் தொடங்கிய அன்று முதலாவது பாடம் சமயம். இந்து சமய ஆசிரியர் ஜெகசோதி வகுப்புக்குள் வந்துவிட்டார். வந்த வரத்தில் பாடத்தை ஆரம்பித்துவிட்டார். எங்கள் வகுப்பில் மிக அழகாகப் பாடக்கூடிய பெண்ணொருத்தியிருந்தாள். அவளுக்கு நாங்கள் கே.பி.சுந்தராம்பாள் என்று பட்டம் கூட வைத்திருந்தோம். அவளை அழைத்து வாத்தியார் ஒரு தேவாரம் பாடச் சொன்னவுடன் அவள் பாட ஆரம்பித்தாள். ம.அன்ரனியின் பெயரில் இருந்து அவனும் கிறிஸ்தவன்தான் என்பது எனக்குத் தெரியும். அவனைப் பார்த்தேன். அவன் கண்களை மூடிக்கொண்டிருந்தான். முன்னைய வருடங்களின் அனுபவங்களின் போது முதல்நாள் சமய வகுப்பில் இந்துசமய வாத்தியார் வகுப்பில் யாராவது வேதக்காரர்கள் இருக்கிறார்களா எனக் கேட்பார். நான் எழுந்து நிற்பேன். "போய் அசெம்பளி ஹோலில் இரு கிறிஸ்தவ சமயத்தைக் கற்பிக்க ஆசிரியர் வருவார்" என்பார். நானும் மூன்று வருடங்களாக தட்டத்தனிய அசெம்பிளி ஹோலில் காத்திருக்கிறேன். வேதக்கார வாத்தியார் வந்தபாடில்லை. இவ்வளவுக்கும் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த ஒரு வாத்தியார் எங்கள் பாடசாலையில் இருந்தார். அவர் சமூகக் கல்வியும் ஆங்கிலமும் கற்றுக் கொடுத்துவந்தார். மற்றைய நேரங்களில் புகைப்படம் பிடிப்பது தபால் தலைகள் விற்பது போன்ற உபதொழில்களையும் மேற்கொண்டு வந்தார்.

நான் எழுந்து ஜெகசோதி வாத்தியாரிடம் "சேர் நான் கிறிஸ்தவ சமயம்" என்று அறிவித்தேன். "வேறு யாராவது கிறிஸ்தவர்கள் வகுப்பில் இருக்கிறார்களா?" என வாத்தியார் கேட்டார். ம.அன்ரனியும் எழுந்து நின்றான். வாத்தியார் எங்கள் இருவரையும் அசெம்பிளி ஹோலுக்கு அனுப்பினார். நாங்கள் இருவரும் அசெம்பிளி ஹோலில் போய் ஒரு மூலையில் இருந்தோம். சற்று நேரத்தில் அவ்வழியால் சென்ற அதிபர் 'ஏன் இங்கு இருக்கிறீர்கள்?" எனக் கேட்டார். "கிறிஸ்தவ சமயப் பாடம்" என்றேன். "இருங்கள் மாஸ்டர் வருவார்" என்று கூறிவிட்டுச் சென்றார். நான் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்து விலகும் வரை கிறிஸ்தவ சமய ஆசிரியர் வரவேயில்லை.

ம.அந்தோனியிடம் நான் பேசிய முதல் வார்த்தை "என்ன உடம்பு சுகமில்லையா?" என்பதாய் இருந்தது. அவன் எனக்கு கூறிய முதல் மறுமொழி "பசிக்குது" என்பதாய் இருந்தது. அதிர்ந்து போய்விட்டேன். பசியைப் பார்த்து நான் அதிர்ந்துபோகவில்லை. எனக்குப் பசி நினைவு தெரிந்த நாளில் இருந்தே மிகவும் பழக்கமானது. அது என் வயிற்றிலேயே குடியிருக்கும் மிருகம். அந்தக் கொடிய மிருகம் என் வயிற்றை எப்போதும் விறாண்டிக்கொண்டேயிருந்தது. பசி எனது கற்பனையில் தேவாங்குக்கும் நரிக்கும் நடுவிலான உடலெல்லாம் புசுபுசுவென ரோமங்கள் கொண்ட ஓர் வெண்ணிற மிருகமாய் இருந்தது. ஆனால் பசிக்கிறது என்பதை வீட்டை விட்டு வெளியே வந்தால் மற்றவர்களிடம் சொல்ல முடியுமா?. ம.அந்தோனி என்னிடம் சொல்கிறான்.! அதுதான் என் அதிர்வுக்கு காரணம். முதலாம் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது புவனம் ரீச்சர் அடிக்காத மாணவர்களிடம் "இன்று என்ன சாப்பிட்டீர்கள்?" என வகுப்பில் கேட்பார். அப்போதெல்லாம் இந்தக் கேள்வியளவுக்கு இன்னொரு கேள்வி என்னைப் பயமுறுத்தியதில்லை. அநேகமாக காலையில் வீட்டில் சாப்பாடு இருக்காது. சில நாட்களில் கிடைக்கும். அது திறிபோச மாவுருண்டையாக இருக்கும். எனினும் நான் 'இன்று இடியப்பமும் சம்பலும், மீனும் சாப்பிட்டேன் என்று வகுப்பில் பொய் சொல்வேன். அநேகமாக இந்தச் சமூகத்தில் நான் சொன்ன முதல் பொய் அதுவாகத்தான் இருக்கக்கூடும்.

இப்பொழுது எனது மூத்த சகோதரன் ஊரில் ஒரு தேநீர்க்கடையில் வேலை செய்ததால் காலையில் ஒரு றாத்தல் பாண் பெறக் கூடியதாக இருந்தது. நாங்கள் நான்கு பிள்ளைகளும் பகிர்ந்து சாப்பிடுவோம். கடைசித் தம்பிக்கும் தங்கச்சிக்கும் அச்சுப்பாணில் இருக்கும் கருகிய ஓரப்பகுதி பிடிக்காது. அதை அம்மாவுக்கு கொடுப்பார்கள். ஆனால் எனக்கு பண்டிகை நாட்களின் மறுநாட்களைத் தவிர அல்லது பப்பா கொழும்பில் இருந்து வந்து ஊரில் நிற்கும் ஆரம்ப நாட்களைத் தவிர மற்றைய நாட்களில் பாடசாலைக்கு கட்டிக்கொண்ட போகச் சாப்பாடு கிடைக்காது. சில நேரங்களில் எப்படியாவது ஒரு இருபத்தைந்து சதம் கிடைத்துவிடும். அதற்கு கார்த்திகேசு கடையில் ஒரு ஐஸ்பழம் வாங்கிச் சூப்பலாம். பசி அடங்கிய மாதிரித் தோன்றும். பகல் ஒருமணிக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கும்போது காத்திருந்த மிருகம் வயிற்றுக்குள் கடித்துக் குதறத் தொடங்கும். எனினும் நான் எப்போதும் என் பசியை வீட்டுக்கு வெளியே யாரிடமும் சொன்னதில்லை. எனது வகுப்புத் தோழர்களுக்கு எனது கொட்டில் வீட்டை கல் வீடு எனவும், எங்களிடம் வரதலிங்கம் மாஸ்டரிடம் உள்ளதை விடத் திறமான வி.எஸ்.ஏ மோட்டார் சைக்கிள் இருக்கிறது எனவும், கொழும்பில் யாழ்தேவி புகையிரதத்தில் லேஞ்சி போட்டு சீட் பிடித்து அதை ஒரு ரூபாவுக்கும் இரண்டு ரூபாவுக்கும் விற்கும் என் பப்பாவை அரசாங்க அதிகாரி என்றும் புளுகி வந்தேன். இதில் பப்பாவின் உத்தியோகத்தை அடிக்கடி மாற்றிக் கூறிவந்ததற்கு எனது மறதி ஒரு காரணம். என் பப்பா கஸ்டம்ஸ், பொலிஸ், மாஸ்டர் என்று பல்வேறு பதவிகளை என் புண்ணியத்தில் வகித்து வந்தார். முக்கியமாக நான் மதிய இடைவேளையில் பட்டினியாய் இருப்பதை யாருக்கும் காட்டிக்கொள்வதில்லை. மதிய உணவு மணி அடித்ததும் வகுப்பறையில் இருந்து வெளியே வந்து மைதானத்திலோ வீதியிலோ சுற்றுவேன். என்னைத் தவிர என் வகுப்பில் இருந்த மற்றவர்கள் எல்லோரும் மதியச் சாப்பாடு கட்டிக்கொண்டு வருபவர்களே. அதிலும் சிலருக்கு பத்து மணிக்கு விடும் "சோர்ட் இன்ரெவலில்" கூட கன்ரினில் வடையும் வாய்ப்பனும் சாப்பிடும் அளவுக்கு வசதி இருந்தது. வகுப்பில் பாடங்களை கவனிப்பதைவிட என் வயிற்றில் வாழும் விலங்கை அடக்குவதிலும் எனது "பவரை"க் காட்டுவதற்கு என்னென்ன பொய் சொல்லலாம் என்று சிந்திப்பதிலுமே எனது பள்ளிக் காலம் கழிந்தது. ம.அன்ரனியிடம் இந்தப் பேச்சுக்கே இடமில்லை. அவன் பசியைக் கண்டு ஒழியவில்லை. அதை நேருக்கு நேரே சந்தித்தான். தன் வறுமையைக் கண்டு அவன் வெட்கப்படவில்லை. அதை எனக்குத் தெட்டத் தெளிவாய் அறிவித்தான்.

இப்பொழுதெல்லாம் மதிய உணவு மணி அடித்ததும் நானும் ம.அன்ரனியும் தெருவுக்கு வருவோம். அவன் பசியை தணிப்பதற்கு சில உத்திகள் வைத்திருந்தான். பாடசாலையிலிருந்து வங்களாவடிக்கு போகும் வீதியின் இருமருங்கிலும் கிளுவை மரங்கள் நிறைந்திருக்கும். நாங்கள் கிளுவங்காய்களை பறித்துத் தின்போம். மயிலப்புலம், சோளாவத்தைப் பகுதிகளிலும் புல்லாந்திச் செடிகள் காணக்கிடைக்கும். அவற்றின் சின்னஞ்சிறிய பழங்களைப் பிடுங்கித் தின்போம். நாகதாளிப் செடிகளில் பழங்கள் பிடுங்கி நட்சத்திர முள்ளைக கவனமாக அகற்றி ம.அன்ரனி எனக்குச் சாப்பிடத் தருவான்.

புல்லாந்திப் பழத்தையும் கிளுவம் பழத்iயும் சாப்பிட்டுவிட்டு என்னத்தைப் படிப்பது? மனம் முழுவதும் சுவையான உணவுகளைப் பற்றிய கற்பனையிலேயே மிதந்து கொண்டிருக்கும். ஐந்தாம் வகுப்பு படிக்கும்வரை பாடசாலையில் பிஸ்கட் தருவார்கள் இப்போது இந்தப் பெரிய பாடசாலைக்கு வந்த பின்பு அதுவுமில்லை. யோசித்து பார்க்கும்போது ஃபெயில் விட்டு ஃபெயில் விட்டு ஐந்தாம் வகுப்பிலேயே இருந்திருக்கலாம் என்றிருக்கும். எங்களுக்கு கணிதம் படிப்பித்த வாத்தியாருக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். அவருக்கு பொடியள் எட்டுஸ்ரீ பட்டம் வைத்திருந்தார்கள். அதாவது எங்கள் தொகுதி பாராளுமன்ற உறுபினருக்கு எட்டாயிரம் ரூபாய்கள் லஞ்சம் கொடுத்து இந்த வாத்தியார் வேலையை பெற்றுக்கொண்டாராம். எங்கள் பாடசாலையில் மூன்று ஸ்ரீயிலிருந்து இருபது ஸ்ரீ வரை பல ஆசிரியர்கள் இருந்தார்கள். எட்டு ஸ்ரீக்கு கணித மாஸ்டர் வேலையைவிட கராட்டி மாஸ்டர் வேலைதான் மிகப் பொருத்தமாய் இருந்திருக்கும். ஆள் நுள்ளான். ஆனால் எங்களுக்கு அடிக்கும்போது எதிரிக்கு அடிப்பதுபோல்தான் அடிப்பார். ஆனால் அவர் எங்கள் வகுப்பிலேயே மிகவும் அமைதியாகவும் சிவப்பு நிறமாயும் காணப்படும் மணிமேகலைக்கு என்றுமே அடித்ததில்லை. பின்பு பத்தாவது படிக்கும்போது எட்டுஸ்ரீ மணிமேகலையை கூட்டிக்கொண்டு ஒடிவிட்டார். பொலிசுக்காரர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்து போனார்கள்.

ஒருமுறை பசி மயக்கத்தில் இருந்த ம.அன்ரனியை எட்டு ஸ்ரீ அடித்த அடியில் மயங்கி விழுந்துவிட்டான். இன்னொரு தடவை விஞ்ஞான டீச்சர் மிஸிஸ் இராசையா பிடித்து அவனை உலுக்கி "ஏனடா நித்திரை கொள்ளவா இங்கே வருகிறாய்?" என்று கேட்டபோது ம.அன்ரனி மரமாய் நின்றிருந்தான். "போய் உங்கள் சாதித்தொழிலைப் பார், உனக்கு எதற்கு சயன்ஸ்?" என்று மிஸிஸ் கந்தையா கேட்டார். வகுப்பில் இருந்து எல்லோருடைய சாதி விபரங்களையும் மிஸிஸ் கந்தையா விரல் நுனியில் வைத்திருந்தார். எப்படி இந்த சாதி விபரங்களை திரட்டினார் என்பது தெரியவில்லை. விஞ்ஞான டீச்சர்! அவருக்க தெரியாத விதிகளா? பரிசோதனை முறைகளா? ஏதாவது ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருப்பார்.

கொடுமை, கொடுமையென்று கோயிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை அவிழ்த்துப் போட்டு ஆடிய கதையாய் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் "வைட் அண்ட் வைட்" போட்டுக்கொண்டு வரவேண்டும் என்றொரு அவசர காலச்சட்டம் பாடசாலையில் கொண்டுவரப்பட்டது. என்னுடைய முதற் சற்பிரசாதத்துக்காகத் தைக்கப்பட்ட எனது வெள்ளைச் சட்டை எனக்கு இப்போது அளவாக இராது. அதை என் தம்பி போட்டிருக்கிறான். அவனிடம் கெஞ்சி மன்றாடி வெள்ளிக்கிழமைகளில் அச்சட்டையைப் போட்டுக்கொண்டேன். அந்த வெள்ளைச் சட்டை தொப்புள் வரைதான் வரும். அடிக்கடி கீழே இழுத்துவிட்டு சமாளிக்க வேண்டியிருந்தது. வெள்ளைக் காற்சட்டை கிடைக்கவில்லை. அதற்குப் பப்பா கொழும்பிலிருந்து வரும் வரை பொறுத்திருக்கவேண்டும்.

வெள்ளிக்கிழமை காலைகளில் ஒரு வெறிநாயின் மூர்க்கத்துடன் அதிபர் பாடசாலையின் முன்வாசலில் நின்றிருப்பார். "வைட் அண்ட் வைட்" போட்டு வராத மாணவர்களின் குண்டிகள் அவரின் பிரம்பால் பழுத்தன. நான் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு மட்டம்போடத் தொடங்கினேன். என் வீட்டு நிலைமை தெரியாத மாணவர்கள் திங்கட்கிழமை காலையில் "பள்ளிக்குக் கள்ளம் பழஞ்சோத்துக்குக் காவல்" என்ற பொருத்தமில்லாமல் என்னை பழிக்கத் தொடங்கினர்.
ஆனால் à®®.அன்ரனி வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலைக்கு போனான். அவனிடமும் "வைட் அண்ட் வைட்" கிடையாது. ஆனால் அவன் அதிபரின் அடியை ஏற்றுக்கொண்டான். அவனுக்கு எதையும் நேருக்கு நேர் சந்தித்துத்தான் பழக்கம். அடிகளைச் சளைக்காமல் ஏற்றுக்கொண்டதன் மூலம் அவன் அதிபரை கேலி செய்தான். இப்படியான சில விறுமத்தடியன்களை அடித்தும் உதைத்தும் பார்த்துத் தோல்வி கண்ட அதிபர் இறுதியில் அவர்களை "வைட் அண்ட் வைட்" போடும்வரை வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு வரக்கூடாது  எனத் தீர்ப்பிட்டார்.

ஒருமுறை பெரிய வியாழன் அன்று நானும் ம.அந்தோனியும் சின்னமடு தேவாலத்திற்கு ஒரு திட்டத்துடன் சென்றிருந்தோம். அவன் சின்னமடு ஆலயப்பங்கைச் சேர்ந்தவன். இயேசுக்கிறிஸ்து சீடர்களுடன் அருந்திய கடைசி இராப்போசன விருந்தைப் பெரிய வியாழன் அன்று கொண்டாடுவார்கள். அன்று பன்னிரண்டு சீடர்களின் கால்களையும் வாசனைத் திரவியங்களாலும் பன்னீராலும் இயேசு கழுவி அவர்களுக்கு விருந்தளித்தாராம். அதை நினைவு கூரும் முகமாக பாதிரி பன்னிரெண்டு சிறுவர்களது கால்களைப் பச்சைத் தண்ணீரால் கழுவிவிட்டு ஆளுக்கு ஒரு றாத்தல் பாண் கொடுப்பான். நாங்கள் இருவரும் சின்னமடு மாதாவுக்கு வைத்த நேர்த்தி வீண்போகவில்லை. அன்றிரவு என் வயிற்றினுள் கிடந்த மிருகம் உறங்கிற்று.
சுகாதாரப் பாடத்தில் உணவு - சமிபாடு - பெருங்குடல் - சிறுகுடல் - குதம் என்று ஆசிரியர் படம் போட்டு காட்டி விளக்குகையில் நான் அந்தப் படத்தில் பசியைத் தேடிக்கொண்டிருந்தேன். நமது தொண்டையில் இருந்து குதம் வரையான ஒரு பௌதிகச் செயற்பாடு எப்படி மண்டை, காது, உள்ளங்கால்கள், விதைகள், ஆணுறுப்பு, பற்கள் என எல்லாவற்றிலும் சுண்டி இழுத்து வதைக்கின்றது என்பது எனக்குப் புரியவே இல்லை.

நான் ம.அன்ரனி எல்லோருமே எங்கள் ஆண்டிறுதிப் பரீட்சையில் வெற்றி பெற்றோம் என அறிவிக்கப்பட்டது. நாங்கள் ஒன்பதாம் வகுப்புக்குச் சென்றோம். ஆனால் ம.அன்ரனி ஒன்பதாம் வகுப்புக்கு வரவில்லை. அவன் பாடசாலைக்கு வராமல் நின்று கொண்டான்; நான் சின்னமடுவுக்கு சென்று தேடினேன். யாழ்ப்பாணத்தில் வேலை செய்யப் போய்விட்டான் என்ற தகவல் கிடைத்தது.
சிலமாதங்களுக்குப் பின் நான் பனங்கிழங்கை விற்பதற்காக யாழ் நகரச் சந்தைக்குச் சென்றிருந்தேன். அம்மா நூறு பங்கிழங்குகளை ஒரு உரப்பையில் போட்டுக் கட்டித்தந்திருந்தார். அப்போது நுறு பனங்கிழங்குகள் ஐந்து ரூபாய். எனக்கு அம்மாவிடமிருந்து ஐம்பது சதம் கொமிசன் போடப்பட்டிருந்தது. மணல் ஏற்றிப் போகும் டராக்டரில் கிழங்குகளோடு ஏறிப் போய்விட்டேன். வழியெல்லாம் என் கொமிசன் ஐம்பது சதத்தை எப்படியெல்லாம் செலவழிப்பது என்று திட்டம் போட்டுக்கொண்டே சென்றேன். கடைசியில் கொஞ்சம் திராட்சைப் பழங்கள் வாங்கி சாப்பிடலாமென முடிவு செய்தேன்.
யாழ் பஸ் நிலையத்தன் முன்பாக வரிசையாக தேநீர்க் கடைகள் இருந்தன. அவற்றில் குலைகுலையாக திராட்சைப் பழங்கள் தொங்கின. ஐம்பது சதத்திற்கு தருவார்களா என்பது தெரியவில்லை. கேட்கவும் பயமாக இருந்தது. கடைகளைப் பார்த்துக் கொண்டே தயங்கித தயங்கி நடக்கும்போதுதான் ம.அன்ரனியைக் கண்டேன்.
ம.அன்ரனி ரஜினி கூல் பாரில் மேசை துடைக்கும் வேலையில் இருந்தான். அழுக்கான சறமும், பனியனும் அணிந்திருந்தான். அவன் இப்போது கொஞ்சம் உடம்பு தெளிந்திருந்தான். அப்போது எனக்கு ஒரு ஆசை எழுந்தது. நானும் அவனுடன் வேலையில் சேர்ந்துவிடுவதென முடிவெடுத்தேன். எவளவு சம்பளம் தருகிறார்கள் என ம.அன்ரனியிடம் கேட்டேன். சாப்பாடு மட்டும்தானாம். தீபாவளிக்கு ஒருசோடி உடுப்பு கொடுத்தார்களாம். மற்றப்படி சம்பளம் ஏதும் இல்லையாம். அங்கு வேலை செய்தால் வடை வாய்ப்பன் என்று விதவிதமாக சாப்பிடலாம் என்று தோன்றியது. முதலாளாளியோடு எனது வேலை விசயமாக பேசுவதாகவும் அடுத்த கிழமை வந்து தன்னைச் சந்திக்குமாறும் ம.அன்ரனி சொன்னான். அடுத்த கிழமை நான் போனபோது அந்தக் கடை எரிந்து கிடந்தது. அந்தக் கடைத் தொடரையே இராணுவம் எரித்து நாசப்படுத்தியிருந்தது.
ஆயிரத்துதொளாயிரத்து எண்பத்து நாலாம் ஆண்டின் கடைசிப்பகுதி என நினைக்கிறேன். கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் இருந்து பழவந்தாங்கல் இரயில் நிலையத்திற்கு சென்றேன். நிலையத்தில் இறங்கி நண்பன் ஒருவனுக்காக காத்துக்கொண்டிருந்தேன். அந்த இடத்தில் நான் ம.அன்ரனியை எதிர்பார்க்கவில்லை. என்னைக் கண்டவுடன் ம.அன்ரனி என் கைகளைப் பிடித்துக் கொண்டான் "எப்படி இருக்கிறீர்கள் தோழர்?" என்று சுகம் கேட்டான். அவன் நின்றிருந்த பழவந்தாங்கல் ஏரியா, அவனின் இளந்தாடி, அவன் என்னை தோழர் என்று சிநேகிதமாய் அழைத்த முறை இவற்றை வைத்து அவன் என்ன இயக்கத்திற்கு வேலை செய்கிறான் என்று கணக்குப் போட்டேன். கணக்கு தப்பவில்லை. அவன் கள்ளங் கபடம் இல்லாமல் தன்னுடைய இயக்கம் பற்றிக் கூறினான். என்னைப் பற்றிக் கேட்டான். வெளிநாடு செல்வதற்காக வந்துள்ளேன் என்று பச்சைப் பொய் சொன்னேன். அவன் என்னை ஆச்சரியத்தோடு கண்கள் சுருங்கப் பார்த்தான். அவன் கண்களில் இருந்தது ஏளனமா, இல்லை ஏக்கமா என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை. பணம் ஏதும் இருந்தால் கொடுக்கும்படியும் தானும் சில தோழர்களும் இரண்டு நாட்களாய் பட்டினியாய் கிடப்பதாயும் நான் அவனுடன் அதிகம் பேச விரும்பவில்லை. பணமும் கொடுக்கவில்லை.
ஆயிரத்துதொளாயிரத்து எண்பத்தொன்பதாம் ஆண்டு நான் கொழும்பில் தங்குமிடமோ, சாப்பாடோ இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன். என் வயிற்றுக்குள் இருக்கும் அக்கொடிய மிருகமும் என்னைப் போலவே வளர்ந்திருந்தது. அந்த விலாங்கு என்னைத் தின்று கொண்டிருந்த அந்தக் கணத்தில் நான் ம.அன்ரனி பற்றிய ஒரு செய்தியை அவனின் படத்துடன் பத்திரிகையில் படித்தேன்.
வவுனியா காவலரணில் இருந்த இருந் ம.அன்ரனி மறைந்திருந்த சுடப்பட்;ட 'சினைப்பர்" தாக்குதலில் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்டபோது அவன் திறந்த ஜீப்பினுள் அமர்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறான். அவனது இரத்தமயமான உடல் சோற்று பருக்கைகளுக் நடுவே கிடந்ததாம். மறுபடியும் மறுபடியும் பத்தரிகைச் செய்தியைத் திருப்பி திருப்பி படித்துப் பார்த்தேன். அவனில் வயிற்றில் குண்டு பாய்ந்திருப்பதாகவும் அவனுக்கு வயது இருபத்திரெண்டு எனவும் சூடுபட்ட உடனேயே அவனது உயிர் பிரிந்து விட்டது எனவும் எல்லாவற்றையும் விளக்கமாகப் பத்தரிகையில் எழுதியிருந்தார்கள். ஆனால் அவனின் வயிற்றினுள் இருந்த அந்த தேவாங்குக்கும் நரிக்கும் இடையேயான புசுபுசுவென்ற வெண் மயிர்கள் கொண்ட மிருகத்தைப் பற்றிய செய்திகள், குறிப்புகள் எதுவும் பத்தரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை.
 
* (இந்த படைப்பு மகாஐனா பழைய மாணவர்சங்கம் பிரான்ஸ் கிளையின் வெளியீடான பவளமல்லியில் இருந்து நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது.)

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...
பெண் என்றாலே நிர்வாணம்தான் - ஆணாதிக்க ஓவியமொழி குறித்து
புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி
யாழ்ப்பாணப் பண்பாட்டின் தெரியப்படாத பக்கங்கள்
காணாமல் போனவை

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 17 Jan 2025 21:10
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Fri, 17 Jan 2025 21:10


புதினம்
Fri, 17 Jan 2025 21:11
















     இதுவரை:  26400147 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 7872 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com