அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow நூல்நயம் arrow அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பத்ரி  
Thursday, 29 July 2004

(திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் விடுதலை நூல் பற்றிய இந்த நயப்புரை http://thoughtsintamil.blogspot.com à®Žà®©à¯à®©à¯à®®à¯ வலைப்பதிவில் இருந்து நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது. இந் நூல்நயம் பரந்த வாசிப்பு அனுபவமும், இணைய வலைத் தளங்களில் நன்கு அறிமுகமுமான தமிழகத் தமிழர் à®’ருவரால்  à®Žà®´à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà®¤à¯ என்பதில் முக்கியத்துவம் பெறுகின்றது. நூலின் அட்டை எம்மால் இணைக்கப்பட்டது.)

அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 1

விடுதலைவிடுதலை கட்டுரைத் தொகுப்பு அன்ரன் பாலசிங்கம் பெயர்மக்ஸ் பதிப்பகம் (Fairmax Publishing Ltd.), P.O.Box 2454, Mitcham, Surrey CR4 1WB, England,  நவம்பர் 2003 பக். 256 விலை UKP 9.50

('அன்ரன்' 'பெயர்மக்ஸ்' போன்றவை புத்தகத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளவை. அதுபோன்றே ஈழத்தமிழில் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.)


அண்டன் பாலசிங்கம் விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். அக்கூட்டத்தின் தலைமைக் கருத்தியலாளர். விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் நேரடியாக ஈடுபட்ட சில பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம் எப்பொழுதுமே பிரபாகரன் பக்கத்தில் இருந்திருக்கிறார். அதுதவிர இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நார்வேயின் உதவியுடன் நடந்த பிரபாகரன் ஈடுபடாத அமைதிப் பேச்சுவார்த்தையில் புலிகள் சார்பாக தலைமையேற்றது பாலசிங்கமே.

"விடுதலை" என்னும் பாலசிங்கத்தின் கட்டுரைத்தொகுதி வெளியானபோது இந்திய செய்தித்தாள்கள் அனைத்திலும் இந்தப் புத்தகத்தின் முதலிரண்டு கட்டுரைகள் முதற்பக்கச் செய்திகளாயின. நானும் அப்பொழுது இந்த கட்டுரைத் தொகுதி ஒரு பிரடெரிக் போர்சைத் நாவலின் வேகமான பகுதிகளைப் போன்று புலிகளின் வீரதீரச் செயல்கள், ஜெயிலுடைப்பு, ஆரம்ப காலத்தில் மற்ற போராளி இயக்கங்களுடன் சண்டை போட்டு பின்னர் பிற இயக்கங்கள் அனைத்தையும் ஆயுத ரீதியாக செயலிழக்கச் செய்தது, எம்ஜியார் - à®°à®¾à®œà¯€à®µà¯ காந்தி போன்ற இந்தியத் தலைவர்களுடனான உறவுகள் என்ற மாதிரியே இருக்கும் என்று நினைத்திருந்தேன். இந்தப் புத்தகம் மூன்று நாள்களுக்கு முன்னர்தான் எனக்கு படிக்கக் கிடைத்தது.

பாலசிங்கம் விடுதலைப் புலிகளின் கலைப் பண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட "வெளிச்சம்" எனும் ஏட்டில் எழுதிய இலக்கியக் கட்டுரைகளுடன் அவசர அவசரமாக எழுதிச்சேர்த்த இரண்டு அரசியல் கட்டுரைகள் சேர்ந்த தொகுப்பு என்பது புரிந்தது. முதலிரண்டு அரசியல் கட்டுரைகளும் கையில் எடுத்தவுடன் கீழே வைக்க முடியாமல் படிக்க வைத்தன. முதலாவது "எம்.ஜி.ஆரும் புலிகளும்". விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆர் தொடக்க காலத்திலிருந்து எவ்வளவு உதவிகளைச் செய்து வந்துள்ளார் என்று விவரிக்கிறது. எம்.ஜி.ஆர் தனது வீட்டின் சுரங்க அறையிலிருந்து கோடிக்கணக்கில் சூட்கேஸில் பணத்தை எடுத்து பாலசிங்கம் கையில் கொடுத்தது, புலிகள் வாங்கிய ஆயுதத் தளவாடங்களை சென்னைத் துறைமுகத்தில் உள்ளே எடுத்தவர முடியாது இந்திய இராணுவம் பாதுகாக்கும்போது எம்.ஜி.ஆர் தமிழகக் காவல்துறை மூலம் அந்தத் தளவாடங்களை வெளியே எடுத்துக்கொண்டு வந்து புலிகளிடம் கொடுத்தது, பிற ஈழப் போராளிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களையும் புலிகளுக்குக் கொடுத்தது, புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்க தமிழக அரசின் சார்பில் ரூ. 4.5 கோடிக்கு காசோலை கொடுத்து பின்னர் ராஜீவ் காந்தியின் மத்திய அரசு அதைத் தடுத்து நிறுத்த தன் பாதாளச் சுரங்க அறையிலிருந்து நேரடியாக காசாகவே எம்.ஜி.ஆர் அந்தத் தொகையைக் கொடுத்தது என்று பல செய்திகளைத் தெரிவிக்கிறார்.

எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழக உளவுத்துறையின் தலைவராக இருந்த மோகன்தாஸ் ஐ.பி.எஸ் மீது புலிகள் எதிர்ப்பாளர் என்றும், அவர் எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் புலிகளுக்கு எதிர்ப்பாக பல செயல்களைச் செய்தார் என்றும் (பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் வீட்டுக்காவலில் வைத்தது காவல் நிலையத்துக்கு அழைத்துக்கொண்டு போய் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியது போன்றவை), எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் தானெழுதிய புத்தகத்தில் (M.G.R: The Man and the Myth, 1991இல் பிரசுரமானது. இப்பொழுது அச்சில் இல்லை) புலிகளைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் பொய்யாக எழுதியிருந்தார் என்றும் குற்றம் சாட்டுகிறார். எம்.ஜி.ஆருடன் கருணாநிதியை ஒப்பிட்டு சிறு சாடல், இப்பொழுது இருக்கும் மத்திய அரசின் உள்நாட்டு வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் நட்வர் சிங், J.N.தீக்ஷித், M.K.நாராயண் ஆகியோர் மீதான விமரிசனம். ஆக இந்தியாவில் நண்பர்களைச் சேர்க்காவிட்டாலும் எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்ளாமலாவது இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறதோ என்ற தோற்றத்தைத் தருகிறது. தொடர்ந்த "ராஜீவ் - பிரபா சந்திப்பு" என்னும் கட்டுரையில் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தம், தொடர்ந்து பிரபாகரன் மீது கொடுத்த கடுமையான அழுத்தத்தினால் ராஜீவ் காந்திக்கும் பிரபாகரனுக்கும் இடையில் ஏற்பட்ட எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றையும் விளக்குகிறார். இந்தக் கட்டுரையின் உள்ளடக்கமும் பல இந்திய செய்தித்தாள்களில் விளக்கமாக விவரிக்கப்பட்டு விட்டன.

ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை புலிகள் ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் என்று ராஜீவ் காந்தியின் ஆலோசகர்கள் பிரபாகரனை வற்புறுத்தினர். இந்த ஒப்பந்தப்படி,

(அ) வட கிழக்கு மாகாணங்கள் தமிழர் சிங்களர் முஸ்லிம் பகுதிகளாக வாக்கெடுப்பின் படி பிரிக்கப்படும்
(ஆ) மாகாண அரசுகளைக் கலைக்கும் உரிமை இலங்கை அதிபருக்கு உண்டு
(இ) புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்பந்தம் கையெழுத்தான 72 மணி நேரங்களில் இந்திய அமைதிப்படையினரிடம் ஒப்படைத்து விட வேண்டும்
(ஈ) புலிகள் வடகிழக்குப் பிராந்தியங்களில் வரியின் மூலம் பணம் சேர்ப்பதையும் விட்டுவிட வேண்டும்.

இவற்றை பிரபாகரன் எதிர்த்தார். ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டிய காரணத்தால் ராஜீவும் மேற்படி ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளன என்றும் அவற்றைக் களைய தான் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் வாய்வார்த்தையால் சொன்னாராம்:

(அ) வட கிழக்கு மாகாணப் பிரிவுக்கான கருத்து வாக்கெடுப்பை நடக்கவிடாமல் ஒத்திப்போட வைப்பது
(ஆ) இடைக்கால அரசில் புலிகள் பெரும்பான்மையிலும் இதரப் போராளிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈரோஸ் போராளிகள் மட்டுமே சிறுபான்மையாக இருக்குமாறும் ஓர் இரகசிய ஒப்பந்தம்
(இ) நல்லெண்ணச் சமிக்ஞையாக சில துருப்பிடித்த ஆயுதங்களை மட்டும் அமைதிப்படையிடம் ஒப்படைத்தால் போதும் ("இந்தியா [எங்களுக்குக்] கொடுத்த ஆயுதங்களெல்லாமே துருப்பிடித்தவைதான்" என்றாராம் பிரபாகரன்) 
(ஈ) புலிகளின் செலவுக்கென இந்திய அரசு அவர்களுக்கு மாதத்திற்கு இந்திய ரூ. 50 லட்சம் தருவது.

இப்படி ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டும் அதை தாளில் எழுதி கையெழுத்திட புலிகள் கேட்டதற்கு ராஜீவ் காந்தியின் ஆலோசகர்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். Gentlemen agreement ஆக வாய் வார்த்தையோடு இருந்துவிட்டுப் போகட்டுமே என்று சொல்லிவிட்டனர். பிரபாகரன் பாலசிங்கத்திடம் "அண்ணா இருந்து பாருங்கோ இந்த இரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஒரு (sic) ஏமாற்று வித்தை." என்று விரக்தியோடு சொன்னாராம். அப்படியே நடந்தது என்று முடிக்கிறார் பாலசிங்கம்.
 
அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 2

இந்த இரண்டு கட்டுரைகளையும் புத்தகத்தின் பாகம் 1 என்று குறிப்பிடலாம். இதைத் தொடர்ந்து வருவது சற்றே கனமான இலக்கிய தத்துவார்த்த சிந்தனைகள் பற்றிய விளக்கக் கட்டுரைகள். இவைதான் "வெளிச்சம்" ஏட்டில் தொடராக வந்தவை. சிக்மண்ட் பிராய்ட், கார்ல் மார்க்ஸ், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஹெகல், அல்துசார், நீட்சே, ஹெய்டெக்கர், ஹுசெர்ல், ஜான் போல் சாத்தர், ஆல்பர்ட் கமு, ஃபுகுயாமா, சோம்ஸ்கி, சாமுவேல் ஹண்டிங்டன், மிஷெல் ஃபூக்கோ என்று பல இலக்கிய தத்துவார்த்தவாதிகளின் தத்துவங்களைப் பற்றிய எளிய அறிமுகம் நன்கு எழுதப்பட்டுள்ளது.

மிக முக்கியமான கட்டுரைகளாக மூன்றைக் குறிப்பிடுவேன். புத்தகத்தின் கடைசிக் கட்டுரையான "மனிதத்துவம், சாத்தர் பற்றிய ஒரு (sic)  அறிமுகம்" சாத்தர் (Jean Paul Satre) பற்றி தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த எளிய முறையில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை எனலாம். சாத்தரின் இருத்தலியக் கோட்பாடுகள் குறித்த விளக்கம், சாத்தரது "குமட்டல்" (Nausea) எனும் நாவல் பற்றிய அறிமுகம் தன் நாவலையே பிற்காலத்தில் சாத்தர் கடுமையாக விமர்சித்தது நோபல் பரிசை ஏற்க மறுத்தது சாத்தரின் மார்க்ஸியக் கருத்துகள் மரபுவாத கம்யூனிஸ்டுகளின் கொள்கைகளை எதிர்த்து வாழ்க்கை முழுதும் எழுத்தால் போராடியது எப்படி ஒரே நேரத்திலேயே இருத்தலியம் மற்றும் மார்க்ஸியம் என இரண்டிலும் வெகுவாகக் கருத்துக்களை முன்வைக்க முடிந்தது (இரண்டையும் ஒட்டவைக்க முயன்றது) ஃபிரான்சுக்கு எதிராக அல்ஜீரியப் புரட்சியாளர்களை ஆதரித்தது என அவரது வாழ்க்கையையும் கொள்கைகளையும் நிறைவாக விளக்குகிறார்.

சாத்தரது எழுத்துகளைப் படிப்பது சிரமமானது. அவரது 'Being and Nothingness' என்னும் 800 பக்கப் புத்தகத்தை சில நாட்களாக வைத்துக் கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கிறேன். பாலசிங்கத்தின் கட்டுரையைப் படித்த பின்னர் மீண்டும் இந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்க முடியும் என நினைக்கிறேன். மேற்படிக் கட்டுரையில் குமட்டல் நாவலின் சுருக்கத்தை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.  Fair quotation எனும் கணிப்பில் அந்த முழுச் சுருக்கத்தையும் வெளியிடுவது நியாயமானதா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பிறகு தனியாகத் தட்டச்சிடுகிறேன்.

இரண்டாவதாகக் குறிப்பிடப்படவேண்டியது ஆல்பர்ட் கமுவைப் (Albert Camus)  பற்றிய "அர்த்தமும் அபத்தமும்" எனும் சிறிய கட்டுரை. "அபத்தமான உலகில் அர்த்தமற்று வாழும் அபத்த நாயகனாக (Absurd Hero) அவர் (கமு) மனிதனைக் கண்டார். இந்த அபத்த மனிதனின் அவலமான அர்த்தமற்ற வாழ்வுபற்றி ஆக்ரோஷத்துடன் எழுதினார்." என்கிறார் பாலசிங்கம். இயந்திர உலகில் வாழும் நவயுக மனிதனின் அலுப்புத் தட்டும் உழைப்பும் அவசர வாழ்வும் அபத்தமானது என்பது கமுவின் கருத்து. இந்த அசட்டுத்தனமான உழைப்பின் குறியீட்டுச் சின்னமாக கிரேக்க இதிகாசத்தின் சிசைப்பஸை முன்வைக்கிறார் கமு. "மனித வாழ்வு அபத்தமானது; துன்பம் நிறைந்தது; நிலையற்றது. இதுதான் இருப்பின் மெய்நிலை. இந்த இருப்பு நிலையிலிருந்து எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. (ஆயினும்) இந்த வாழ்நிலையை மனிதன் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். அபத்தத்திலும் அர்த்தமின்மையிலும் அர்த்தத்தைக் காண்பதுதான் அர்த்தமான வாழ்வாக அமையும் என்பது அவர் கருத்து. Myth of Sisyphus என்ற அவரது (கமுவின்) தத்துவ நூல் மானிடத்திற்கு இந்தத் தரிசனத்தையே தருகிறது." என்கிறார் பாலசிங்கம்.

கமுவின் கிளர்ச்சிக்காரன் (The Rebel) என்ற தத்துவ நூல் அரசியல் உலகத்தைப் பற்றிய கடுமையான விமரிசனத்தை முன்வைக்கிறது. மத சித்தாந்தங்களை மட்டுமின்று கம்யூனிச உலகையும் கடுமையாகச் சாடியது இந்நூல். இதனால் கம்யூனிஸ்ட் தோழர்கள் பலரது நட்பையும் நீண்ட கால நண்பர் சாத்தரின் நட்பையும் கூட கமு இழக்க நேரிட்டது.

அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 3

மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது "உலக வரலாறும் மனித விடுதலையும்" என்னும் கட்டுரை. இந்த நீண்ட கட்டுரையில் பாலசிங்கம் ஹெகலின் இயங்கியலில் (dialectics) தொடங்கி அங்கிருந்து கார்ல் மார்க்ஸின் தத்துவத்துக்குத் தாவுகிறார். மார்க்ஸைப் புரிந்து கொள்ள ஹெகலை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று லெனினை மேற்கோள் காட்டுகிறார். ஹெகலின் கருத்து "வரலாறு என்பது ஆன்மத்தின் விடுதலை நோக்கிய நகர்வு". மார்க்ஸ் ஹெகலின் எழுத்துகளை "ஆன்மீகவாதம்" என்றும் "புதிரான புராணக்கதை" என்றும் விமர்சித்தபோதும் அவரது இயங்கியல் கோட்பாட்டை வெகுவாகப் புகழ்ந்தார். "ஹெகலின் கருத்துலகத்திலிருந்து இயங்கியலைப் பிரித்தெடுக்கும் அறுவைச் சிகிச்சையை" மார்க்ஸியம் என்கிறார் பாலசிங்கம். "இயங்கியலின் அடிப்படையில் ஆன்மத்தின் சூட்சுமத்தை விளக்க முனைந்தார் ஹெகல். அதே இயங்கியல் விதிகளைக் கொண்டு இயற்கையின் இரகசியங்களை விளக்க முனைந்தார் எங்கல்ஸ். அதே விதிகளைக் கொண்டு சமூக வரலாற்று இயக்கத்தை விளக்க முனைந்தார் மார்க்ஸ்." என்கிறார் பாலசிங்கம்.

கட்டுரையில் தொடர்ந்து மார்க்ஸின் கொள்கைகளை விவரித்து அதன்மீதான் அல்துசாரின் விமரிசனங்களைப் பற்றியும் விளக்குகிறார். கார்ல் மார்க்ஸின் "மூலதனம்" முதலாளிய சமூகத்தின் உற்பத்தி வடிவத்தை வகிர்ந்து காண்பிப்பது முதலாளிய உற்பத்தி முறையில் நிலவும் முரண்கள்இ இந்த முரண்களால் முதலாளியம் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி பின்னர் சிதைந்து போகும் என்று எழுதியுள்ளது பற்றி விவரிக்கும் பாலசிங்கம் ஏன் மார்க்ஸின் தீர்க்கதரிசனம் பலிக்கவில்லை என்பதையும் விளக்குகிறார்.

மார்க்ஸின் கொள்கைகளைத் தொடர்ந்து ரஷ்யா - சீனா நாடுகளில் ஏற்பட்ட கம்யூனிச அரசுகள், நவ-மார்க்ஸியக் கருத்துகள் ஆகியவற்றை பாலசிங்கம் விவரமாக ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வின் மூலம் சோசலிசம் சிதைந்ததற்கான காரணங்களையும் முன்வைக்கிறார்.

தொடர்ச்சியாக புக்குயாமாவின் "சமூகப் பொருளுற்பத்தி வடிவங்களின் படிநிலை வளர்ச்சியின் உச்சமாக முதலாளியமும் அரசியலமைப்பின் உச்சமாக லிபரல் ஜனநாயகமும் உருவாக்கம் பெற்றதால் உலக நெருக்கடி நிலைமைகள் தணிந்து மனித வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது" என்னும் கருத்து இன்று பொய்த்துவிட்டது என்கிறார் பாலசிங்கம். "மானிட சமூகம் இன்னமும் உன்னதம் பெறவில்லை. மனிதர்களிடையே பிணக்குகள் இன்னமும் தீர்ந்துவிடவில்லை. முரண்பாடுகள் நீங்கிவிடவில்லை. மானிடம் இன்னும் விடுதலை பெறவில்லை." என்னும் பாலசிங்கம் சாமுவேல் ஹண்டிங்டனின் நாகரிகங்களின் மோதல் (Clash of Civilizations) எனும் கோட்பாட்டை அடுத்து அறிமுகப்படுத்துகிறார்.

"நாகரிகங்கள் மத்தியிலான முரண்பாடும் மோதலுமாகவே இனப் போர்கள் வெடிக்கின்றன. நாகரிகங்களின் வளர்ச்சியும் எழுச்சியும் அவை மத்தியில் நிலவும் உறவு முறைகளுமே எதிர்கால உலக ஒழுங்கமைப்பையும் மனித வரலாற்றின் போக்கையும் நிர்ணயிக்கும் என்பது ஹண்டிங்டனின் வாதம்" என்கிறார் பாலசிங்கம். ஆனால் இந்தக் கொள்கை மூலம் இன்றைய உலகில் உள்ள பல்வேறு அரசியல் நெருக்கடிகளை விளக்கி விட முடியாது என்கிறார் பாலசிங்கம். "இன விடுதலைப் போராட்டங்களை பண்பாட்டுத் தனித்துவத்திற்கான போராட்டமாக மட்டும் வரையறுத்துப் பார்க்க முனைவது தவறு. அந்நிய அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக தேச சுதந்திரம் வேண்டி நடைபெறும் விடுதலைப் போராட்டங்களின் ஆழமான பரிமாணங்களை அவர் (ஹண்டிங்டன்) கண்டு கொள்ளவில்லை." என்கிறார் பாலசிங்கம்.

ஆனால் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக இலங்கையில் சிங்கள -தமிழ் இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள சண்டையையும் இலங்கையில் தமிழர்கள் தனிநாடு கேட்பதற்கான கருத்தியல் ரீதியான கோட்பாட்டு விளக்கத்தையும் பாலசிங்கம் வைக்கவில்லை. வேண்டுமென்றே விட்டுவைத்துள்ளாரா என்பதும் தெரியவில்லை.

முதலிரண்டு அரசியல் கட்டுரைகளையும் நீக்கிப் பார்க்கும்போது இந்தப் புத்தகம் தமிழில் எழுதப்பட்டுள்ள மிக முக்கியமான புத்தகம் என்று நான் கருதுகிறேன். மேற்கத்தியத் தத்துவ உலகம் பற்றி அறிய விரும்பும் தமிழர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டிய முதல் புத்தகம் இதுவாக இருக்கலாம். இந்தச் சிந்தனைகள் பற்றி இந்த அளவிற்கு எளிமையாகவும் அதே சமயம் செறிவாகவும் தமிழில் வேறு புத்தகங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆழ்ந்த படிப்பும் அதை வெளிச்சொல்லும் திறமையும் வாய்ந்த பாலசிங்கம் தமிழ்ச் சிந்தனை உலகில் மிக முக்கியமானவர் என்பதிலும் வேறு கருத்து இருக்க முடியாது. தன் மற்ற வேலைகளுக்கிடையில் பாலசிங்கம் இன்னமும் பரவலாக எழுதவேண்டும்.

*எண்ணங்கள்
  ஞாயிறு ஜூலை 25 2004

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 16:07
TamilNet
HASH(0x55c4bc5427c8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 16:07


புதினம்
Thu, 28 Mar 2024 16:07
















     இதுவரை:  24712935 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5826 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com