Wednesday, 01 November 2006
1.
குமாரபுரம் சித்திரவேலாயுத கோவில் விழாக்கோலம் பூண்டிருந்தது. பலநூறு ஆண்டுகளாகச் சிதைந்து போய்க்கிடந்த அந்தச் சிறிய பழம்பெரும் ஆலயம் இன்று புனருத்தாரணம் செய்யப்பட்டுப் புதுக்கோலம் காட்டியது.
மலர் மாலைகளாலும், மகர தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த மண்டப முன்றலில் முல்லைச் சகோதரிகளின் தேவாரப் பண்ணிசை தேன்மாரியாய்ப் பொழிந்த கொண்டிருந்தது. கோவில் சந்நிதியில் அந்தத் தெய்வீக இசையில் மனமுருகிப் பக்திப் பரவசமான நிலையில் கரங்கூப்பி நின்றிருந்தனர் மூன்று சகோதரிகள். அவர்களுடனே அவர்களுடைய கணவன்மார்கள் ஆளுக்கொரு மகவைக் கையில் ஏந்தியபடி பக்தியுடன் நின்றிருந்தனர்.
அவர்களைச் சூழ்ந்து குமாரபுரம் கூட்டுறவுக் கிராமவாசிகள் மனநிறைவோடு குழுமி நின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கமம் செய்வதற்குக் காணி இல்லாமல், இருக்கவும் சொந்த இடமின்றி அல்லல்பட்ட அந்த ஏழைக் குடும்பங்கள் இன்று தம் ஏழ்மை அகன்ற நிலையிலே, தங்களுக்கு அந்தக் காணிகளைப் பகிர்ந்தளித்த அந்த மூன்று சகோதரிகளையும், தங்களுக்கென ஒரு கூட்டுறவுக் கிராமத்தை அமைத்து, ஒரு பாடசாலையையும் உருவாக்கி, கோவிலைப் புதுப்பித்து, மக்களுடைய பொறுப்பிலேயே ஆலய நிர்வாகத்தையும் கையளிக்கக் காரணமாயிருந்த அந்தச் சகோதரிகளின் கணவன்மாரையும் வாழ்த்தி நின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன் பாழடைந்து கிடந்த அந்த ஆலயமும் அதையொட்டியிருந்த எண்பது ஏக்கர் நிலமும், மேட்டுக் காடும் 'வன்னியா குடும்பம்" என்று அழைக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்குத்தான் சொந்தமாகவிருந்தன.
எங்கோவெல்லாம் சீரும் சிறப்பும் மிக்க அழகிய ஆலயங்களில் குடியிருக்கும் முருகக் கடவுள் இங்குமட்டும் சித்திர வேலைப்பாடமைந்த அழகிய வேலைக் கையிலே ஏந்தியபடி பாழடைந்த கோவிலிலே குடியிருந்தார்.
காரணம்? வன்னியா குடும்பத்தினரின் மூதாதையினரால் கட்டப்பட்டுக் கோலாகலமாக் கொண்டாடப்பட்டு வந்த அந்தக் கோவில், இடையிலே அவர்களுடைய பரம்பரையிலே வந்து பிறந்து கொடுங்கோலோச்சிய இரு சகோதரர்களின் நடத்தை காரணமாகவே பாழடைந்தது என்பர் பலர். இவ்விருவரும் அன்று செய்த அட்டுழியங்களும், பாவங்களுமே இன்றும் அந்தப் பரம்பரையிலே எஞ்சி நின்ற ஒரேயொரு குடும்பத்தையும் சூழ்ந்து கொண்டது என்பர் சிலர்.
ஆனால் இன்று, அந்த ஆலயவாசலில் நின்று நோக்கினால், காடய்க் கிடந்த எண்பது ஏக்கர் நிலத்திலும் ஆங்காங்கு சுமார் இருபத்தைந்துக்கும் அதிகமான குடிசைகள் இருப்பதையும், அந்தக் குடிசைகளைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் தோட்டப்பயிர்கள் செழுமையாக வளர்ந்து சிரிப்பதையும் காணலாம்.
ஆலயவாசலுக்கு நேரே சற்றுத் தொலைவில் நின்ற 'ஆனை கட்டின புளி" என்று அழைக்கப்படும் பெரிய கிழட்டுப் புளியமரத்துக்கும் அப்பால் ஒரு சிறிய ஓட்டுக் கட்டிடம் அந்தக் கூட்டுறவுக் கிராமத்தின் குழந்தைகள் பயிலும் பள்ளியாக மாறியிருந்தது.
இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணமாகவிருந்த வன்னியா குடும்பத்தின் இன்றைய வாரிசுகளான அந்த மூன்று சகோதரிகளும், அவர்களுடைய துணைவர்களும் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, குமாரபுரத்தின் கறைபடிந்த சரித்திரம் மாற்றப்பட்டதைக் குறிக்கும் இந்த நன்னாளிலே, எதிரே.... மென்சிரிப்புடன் காட்சி தந்த முல்லைக் குமரனை மனமுருகி வழிபடும்போது, தங்கள் நினைவில் நிலைத்திருக்கும் ஒரு பெண்ணையும் கண்கள் பனிக்க வாழ்த்திக் கொண்டனர்.
அந்தப் பெண்ணின் பெயர்..... 'சித்திரா".....
(வளரும்..)
|