அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 12 September 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 09
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 09   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Sunday, 18 February 2007

09.

பொழுது சாய்ந்து சற்று நேரத்திற்குள் நிலவு காலித்து விட்டது. குமாரு தன்னுடைய எருதுகளிரண்டிற்கும் அரிந்து வைத்திருந்த பசும்புல்லைத் தொழுவத்தில் சொரிந்துவிட்டு, மாட்டுக் கொட்டிலின் அருகே நுளம்புகளை விரட்டுவதற்காக நெருப்பு மூடடுவதற்கு விறகு சேகரித்துக் கொண்டிருந்தான்.

நன்றாகக் காய்ந்த சில கட்டைகளை அவன் தோளிலே சுமந்து வருகையில், எதிரே அந்த ஒழுங்கையில் தங்கள் வளவை நோக்கி நாலைந்துபேர் வருவது தெரிந்தது. பகலில்கூட அந்தப் பகுதிக்கு மக்கள் வருவது குறைவாதலின், யார் இவர்கள்? எங்கே போகிறார்கள்? என்று அவன் யோசிப்பதற்குள், 'உங்கற்றா வாறான் குமாரு!" என்று ஒருவன் கூறுவது கேட்டது. அதற்குள் அவர்கள் குமாருவை நெருங்கி வந்துவிட்டார்கள். நிலவொளியிலே அவன் அவர்களை அடையாளம் கண்டு கொண்டான். அத்தனை பேருமே அசல் காடையர்கள். ஒரு தொழிலுக்கும் போகாமல், வீதியோரங்களில் வம்பளப்பதும், கள்ளுத் தவறணையில் காலத்தைக் கழிப்பதுமாக வாழும் ஒரு கூட்டம்! தற்போதும் அவர்கள் நன்றாகக் குடித்திருந்தது தெளிவாகத் தெரிந்தது. ஒருவன் தன் கையில் ஒரு முழுப்போத்தலை வைத்திருந்தான்.

அவர்களுக்குத் தலைவனான கலாதிச் சின்னையன் வந்து குமாருவுக்கு முன்னே நின்று, 'டேய் குமாரு! இண்டைக்கு இரவைக்கிடையிலை நீ இந்த ஊரை விட்டிட்டுப் போகிடோணும்! இல்லாட்டில் விடியக்கிடையிலை உன்னைச் சரிப்பண்ணிப் போடுவம்!" என்று முரட்டுத்தனமாக ஏசினான்.

குமாருவுக்கு நிலமை புரிந்தது. வன்னியா வளவு விவகாரந்தான்; இத்தனைக்கும் கால் என்பதையுணர்ந்த அவன் மௌனமாக நின்றான். சின்னையனுக்குப் பக்கத்தில் நின்ற ஒரு கட்டையன், 'என்னடா மடையா? பேசாமல் நிக்கிறாய்? ஊர்பேர் தெரியாமல் இஞ்சை கூலிவேலை செய்ய வந்தவனுக்கு வன்னியா வளவிலை என்னடா சேட்டை?" என்று குமாருவின் நெஞ்சில் கையை வைத்து முரட்டுத்தனமாகத் தள்ளினான்.

குமாருவுக்கு கோபமும், ஆத்திரமும் வினாடிக்கு வினாடி ஏறிக்கொண்டிருந்தன. அந்தக் கட்டையன் தள்ளியபோது இரண்டடி பின்னால் சென்றவன், தோளிலே சுமந்து வந்த கட்டைகளுள் உறுதியான ஒன்றைமட்டும் கையில் பிடித்துக்கொண்டு மீதியை நிலத்திலே நழுவவிட்டான்.

அந்தநேரம் முன்னால் பாய்ந்த சின்னையன், குமாரு கையிலே வைத்திருந்த கட்டையைப் பறிக்க முயற்சித்தான். சட்டென ஒதுங்கிக்கொண்ட குமாரு, இலக்குத் தவறி விழப்போன அவனுடைய முதுகில் கட்டையால் ஓங்கிப் போட்ட போட்டில் சின்னையன் அலறிக்கொண்டே ஒழுங்கை ஓரமாகப் போய் விழுந்தான். அவன் விழுந்ததைக் கண்டதும் மற்றவர்கள் குமாருமீது ஆவேசத்துடன் பாய்ந்தனர். அவர்கள் அதிகமாகக் குடித்திருந்தமையால் குமாருவினால் அவர்கள் அத்தனை பேருக்கும் ஈடுகொடுத்து அடிக்க முடிந்தது.

அவன் தன் கையிலே இருந்த காயாங்கட்டையினால் ஒவ்வொருவனாகப் பதம் பார்க்கவே, அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடவாரம்பித்து விட்டனர். அவர்கள் எல்லோரும் ஓடிவிட்டார்கள்தானே எனக் குமாரு கவனமில்லாது நின்ற ஒரு கணத்தினுள் அவனுடைய தலையில் மடாரென்று ஒரு அசுரத்தனமான அடியொன்று விழுந்தது. அடியுடன் போத்தல் ஒன்று சிதறி உடையும் ஓசையும் கேட்டது. குமாரு மீண்டும் கட்டையை உயர்த்திக்கொண்டு திரும்பினான். அடித்தவன் தொலைவிலே ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

பெரிய சண்டியன்கள்! தனக்குள் சிரித்துக்கொண்ட குமாரு வீட்டை நோக்கி நடந்தான். தலையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

அரிக்கன் லாம்பை உயர்த்திக் காயத்தைப் பார்த்த செல்லையர் பயந்து போனார். 'ஆரடா மோனை அடிச்சது! வா! வண்டிலைப் பூட்டிக்கொண்டு போய் முல்லைத்தீவிலை மருந்து கட்டிப்போட்டுப் பொலிசிலையும் அறிவிச்சுப்போட்டு வருவம்!" என்று பதறினார் செல்லையர்.

'காயம் அவ்வளவ மோசமில்லை அம்மான்! சும்மா கழுவிப்போட்டு ஏதும் கைமருந்து வைச்சுக் கட்டிவிட்டால் காணும் .. .. பொலிசுக்குப் போய் என்ன செய்யிறது? அடிச்சதுக்கு சாட்சி இல்லை! அவங்கள் பொலிசுக்கும் காசு குடுத்து ஒழுங்கு பண்ணிப் போட்டுத்தான் வந்திருப்பாங்கள்! அவங்களுக்கு நான் காயங்கட்டையாலை குடுத்தது காணாது!" என்று அந்த நிலையிலும் சிரித்தான் குமாரு.

குமாரு அமைதியாக இருந்தாலும் செல்லையர் எதையெல்லாமோ எண்ணிப் பயந்தார். 'எதுக்கும் நான் ஒருக்காப் போய் வன்னிச்சியாரிட்டைச் சொல்லிப்போட்டு வாறன்!" என்று அரிக்கன் லாம்பையும் எடுத்துக் கொண்டு வன்னியா வளவுக்குச் சென்றார் செல்லையர்.

  செல்லையருடைய பரம்பரை, கைதடியிலிருந்து வந்து தண்ணீரூற்றில் வசித்து வந்தது. குமாருவின் தாய், செல்லையருக்கு ஒன்றுவிட்ட தங்கை முறை. அவள் புதுக்குடியிருப்பிலே திருமணம் செய்து குமாருவைப் பிரசவித்தபோது இறந்துவிட்டாள். அந்நாட்களில் செல்லையரின் மனைவியும் உயிருடன் இருந்தாள். குமாரு கைக்குழந்தையாய் இருக்கையிலே அவர்கள் அவனைக் கொண்டுவந்து வளர்க்கத் தொடங்கினர். வேறு திருமணம் செய்துகொண்ட குமாருவின் தகப்பனும் தண்ணீரூற்றுத் தொடர்பை மறந்துபோனான்.

கிராமத்துக் கமக்காரருடைய வயல்களிலே கூலிக்கு வேலை செய்த செல்லையர், குமாருவைச் சிறு பையனாக இருக்கும்போதே தன்னுடன் கூட்டிச் செல்வார். அவருடைய அனுபவமிக்க கண்காணிப்பிலே குமாரு ஒரு திறமையான வேலையாளாக வளர்ந்திருந்தான். அவனுக்கு இருபத்தைந்து வயதாகையில் இருவருடைய உழைப்பின் சேமிப்பைக் கொண்டு ஒரு வண்டியையும் எருதுகளையும் வாங்கியிருந்தனர். அதனால் கிடைக்கும் வருமானம் இருவருக்கும் போதுமானதாகவே இருந்தது.

அவனுக்கு ஆராவது ஒரு நல்ல பொட்டையாப் பாத்துக் கலியாணம் செய்து வைக்கோணும் எண்ட எண்ணம் செல்லையருக்கு இருந்ததுதான். ஆனால் இப்படி எக்கச்சக்கமான இடத்திலிருந்து  சம்பந்தம் வருமென அவர் எதிர்பார்க்கவில்லை. பழைய தலைமுறையைச் சேர்ந்த அவருக்கு இந்தப் புதிய மாற்றம் திகிலை ஏற்படுத்தியது. அருமந்த பொடியனை அடிச்சல்லோ கொண்டு போடுவாங்கள் என அவர் பயந்தது போலவே அடிதடி ஏற்பட்டதால் எப்படியாகிலும் வன்னிச்சியாரிடம் சென்று, இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிடுவோம். இவ்வளவு நாட்களும் அமைதியாக வாழ்க்கை நடத்திய எங்கள் வாழ்விலே இந்தக் குழப்பங்கள் வேண்டாம், என்று இந்தச் சம்பந்த விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டும் என்ற தீர்மானத்துடன், செல்லையர் பரக்கப் பரக்க அந்த நிலவில் வன்னியா வளவுக்குப் போய்க்கொண்டிருந்தார்.

அங்கே சித்திராவும், நிர்மலாவும் நிலவொளியில் கிடுகு இழைத்துக் கொண்டிருந்தனர். தங்கைகள் உள்ளே படிக்க, வன்னிச்சியார் திண்ணையிலே அமர்ந்து பாக்குத் துவையலுடன் பழையகால ஞாபகங்களையும் சேர்த்து அசை போட்டுக் கொண்டிருந்தாள்.

பதறிப்போய் வந்த செல்லையரைக் கண்டதுமே சித்திராவும், தங்கையும் எழுந்து பெத்தாச்சி அமர்ந்திருந்த திண்ணையடிக்கு வந்துவிட்டனர்.

அன்று செக்கல் நேரத்தில் செல்லையர் வளவால் திரும்பிய பெத்தாச்சி, குமாரு திருமணத்திற்குச் சம்மதித்து விட்டான் என்பதைத் தெரிவித்தபோது சித்திரா மனப்பூர்வமாகத் திருப்திப்பட்டுக் கொண்டாள். பொங்கலன்று, கற்புக்கரசியான கண்ணகி அம்மனின் சந்நிதியில் நின்று, எனக்கும் தங்கைகட்கும் நல்ல வாழ்வைக் கொடு தாயே! என்று இரங்கி ஏங்கிய எனக்கு வாழ்வைக் கொடுக்காமல் வசையைக் கொடுத்து விட்டாயே அம்மா! என அன்று முழுவதும் புழுங்கிய சித்திரா, குமாருவின் சம்மதத்தை அறிந்ததும், மகிழ்ச்சியுடன் அம்மாளை வாழ்த்திக் கொண்டாள். வசை ஏற்பட்டதும் ஒருவகையிலே நன்மையாக முடிந்துவிட்டது. என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, நான் ஒரு கரைசேர்ந்து என்னுடைய தங்கைகளையும் வாழ வழி வகுக்க வேண்டும்! என்ற சிந்தனைகளுடன் அவள் கிடுகு பின்னிக் கொண்டிருந்த சமயத்திற்றான் செல்லையர் அவசரமாக வந்திருந்தார்.

அவருடைய நிலையையும் பதற்றத்தையும் கண்டவுடனேயே ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதென்று சித்திராவும் ஏனையோரும் உணர்ந்தனர்.

'குமாருவுக்கு ஆரோ அடிச்சு மண்டையை உடைச்சுப் போட்டாங்கள்!" செல்லையர் இளைக்க இளைக்கச் சொன்னதும் சித்திரா துடித்துப் போனாள்.

'காயம் கடுமையோ அவருக்கு?" சித்திரா பதறிப்போய்க் கேட்டதற்கு, செல்லையர் அவளைத் திரும்பிப் பார்த்தார். மாலையில் முகங்கழுவி, நீண்ட கூந்தலை வாரிமுடித்துப் பொட்டிட்டு பளிச்சென்று விக்கிரகம் போல் நின்ற சித்திராவையும் விளக்கின் ஒளியிலே அவள் விழிகளில் தெரிந்த அக்கறையையும், ஆர்வத்தையும் கண்ட செல்லையருக்குத் தான் வந்த விஷயம் மறந்து போயிற்று.

'ஓம் புள்ளை! மண்டை உடைஞ்சு இரத்தம் பாயுது.. நான் அவசரத்திலை இஞ்சை பாஞ்சு வந்திட்டன்," என அவர் சொன்னதும், 'கனக்க இரத்தம் பாய்ஞ்சுதேயெண்டால் கூடாதெல்லோ! நடவுங்கோ பாப்பம்!" என்று புறப்பட்டுவிட்டாள் சித்திரா.

'நில்லம்மா நானும் வாறன்!" எனப் பெத்தாச்சியும் புறப்பட்டபோது, 'இஞ்சை தங்கச்சியவளவை தனிய.. நீங்கள் நில்லுங்கோ!" என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள் சித்திரா.

சித்திரா நிலவிலே குமாரபுரத்திற்குச் செல்லும் குறுக்குப் பாதையிலே பறந்தாள். செல்லையரால் அவளுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர் வருவதற்கிடையில் சித்திரா அங்கு போய்ச் சேர்ந்துவிட்டாள்.

அங்கே குமாரு குடிசைத் திண்ணையிலே கிடந்தான். அவனருகே அமர்ந்த சித்திரா அவனைத் தொட்டு மெல்ல அசைத்து, 'இஞ்செருங்கோ!" எனக் கூப்பிட்டாள். எந்தவித சலனமும் இல்லாது போகவே, அவன் மயக்கமாகி விட்டதை உணர்ந்த அவள், குடத்தடிக்கு ஓடிச்சென்று ஒரு சட்டியில் தண்ணீரைக் கொண்டுவந்து அவனுடைய முகத்தில் தெளித்தாள்.

சில்லென்ற நீர் முகத்தில் பட்டதும் குமாருவின் முகத்தில் சிறிது மாற்றம் தெரிந்தது. சித்திரா விளக்கை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, குமாருவின் தலையைத் தன் மடியிலே வைத்துக் காயத்தைக் கவனித்தாள். இரண்டங்குல நீளத்திற்குக் காயம் ஏற்பட்டிருந்தது. சிறிய கண்ணாடித் துண்டுகள் ஒடடிக் கொண்டிருந்தன. அவள் தண்ணீரால் காயத்தை மெதுவாகக் கழுவி, அங்கே குத்திக் கொண்டிருந்த கண்ணாடிச் செதில்களைப் பக்குவமாக எடுத்துக் கொண்டிருந்த சமயம் செல்லையரும் அங்கு வந்துவிட்டார்.

'பழஞ்சீலை ஒண்டு தாருங்கோ!" என்று அவள் கேட்டதும், செல்லையர் தனது பழைய சால்லை ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்ததுடன், 'கொஞ்சம் பொறு புள்ளை! நாவல் பட்டை அடிச்சு அரைச்சுத் தாறன்! வைச்சுக் கட்டிவிட்டியெண்டால் இரண்டு நாளைக்கை காய்ஞ்சு போடும்!" என்றபடியே கோடரியைத் தூக்கிக்கொண்டு எதிர்ப்பக்கத்துக் காட்டோரத்தில் நின்ற நாவல் மரத்தடிக்குச் சென்றார்.

முகத்தில் தண்ணீர் பட்டதனாலும், இரத்தம் பெருகுவது நின்றுவிட்டதனாலும் குமாருவுக்கு நினைவு திரும்பிக் கொண்டிருந்தது. அவனுடைய விழிகள் மெல்லத் திறந்தபோது, அவனுடைய முகத்துக்கு மிகவும் அண்மையிலே சித்திராவின் முகம் இருந்தது.

இருளின் பின்னணியில் அவளுடைய சிவந்த முகம் மங்கலான கைவிளக்கின் ஒளியை அப்படியே செந்நிறமாகப் பிரதிபலித்தது. அந்த அழகிய வதனத்தின் ஆதரவும் பாசமும் நிறைந்த கருவிழிகள், அவனுடைய முகத்தையே பார்த்திருந்தன. அவனுடைய நினைவு திரும்பியதைக் கண்டதும், அவளுடைய மனதிலே ஏற்பட்ட நிம்மதி சித்திராவின் முகத்தை மலரச் செய்தது.

கருணையும், எழிலும் ஒருங்கே பொழியும் அந்த அழகிய முகத்தையே குமாரு கண்கொட்டாது பார்த்தான். சித்திரா எப்படி இங்கு வந்தாள்? அவளுடைய முகம் என் இப்படி எனக்கு மிகவும் அண்மையில் தோற்றுகின்றது? இந்த இளைய முகத்தின் தோற்றம் உண்மையானதுதானா? என்றெல்லாம் சிந்தித்த குமாரு, தன் கரத்தை உயர்த்தி, தனக்கு மிகவும் அருகிலே தோன்றிய அந்த முகத்தை மெல்லத் தொட்டுப் பார்த்தான்.

சித்திரா அன்புடன் அந்தக் கரத்தைப் பற்றித் தன் முகத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.


மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 12 Sep 2024 18:11
TamilNet
Even though I first met Viraj Mendis in Geneva, his reputation as a fearless advocate for Tamil liberation preceded him. The movement respected Viraj, and many of our leaders in the diaspora and the homeland sought his clarity and insight. I consider myself fortunate to have worked with him and learned from him.
Sri Lanka: Viraj exposed West?s criminalization of Tamil struggle


BBC: உலகச் செய்திகள்
Thu, 12 Sep 2024 18:08